திருவாரூர்
சாய்ந்த நிலையில் மின்கம்பம்
|கூத்தாநல்லூர் அருகே சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை அதிகாரிகள் கவனித்து சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை அதிகாரிகள் கவனித்து சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சாய்ந்த மின்கம்பம்
கூத்தாநல்லூர் அருகே உள்ள வாழச்சேரியில் இருந்து கோரையாறு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் பள்ளி வாகனங்கள், கார், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் அதங்குடி, வெள்ளக்குடி, விழல்கோட்டகம், சித்தாம்பூர், வாழச்சேரி, கிளியனூர், அத்திக்கடை போன்ற கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த சாலையில் தினமும் சென்று வருகின்றனர்.
மேலும் இந்த சாலை வழியாகத்தான் அருகாமையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த சாலையில் இரண்டு பக்கமும் உள்ள இரண்டு மின் கம்பங்கள் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் சாய்ந்த நிலையில் உள்ளது.
உயிர்சேதம் ஏற்படுமோ?
அந்தப்பக்கம், இந்தப்பக்கம் என இரண்டு பக்கமும் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களால் அப்பகுதியை கடந்து செல்லும் மக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் அந்த வழியாக செல்வோர், அந்த ஆபத்தான மின்கம்பங்கள் சாய்ந்து கீழே விழுந்து உயிர்சேதம் ஏதும் ஏற்படுமோ? என்று அச்சம் தெரிவிக்கின்றனர்.
மேலும், மழை காலம் தொடங்கும் வாய்ப்பு உள்ள நிலையில், பலத்த காற்று வீசக்கூடும். இதனால் இந்த சாய்ந்த மின் கம்பங்களால் பெரிய அளவில் விபரீதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.
சரிசெய்ய வேண்டும்
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எந்தநேரமும் ஆபத்ததை ஏற்படுத்த காத்திருக்கும் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சரிசெய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.