புதுக்கோட்டை
வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
|வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அதிகாரி ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகளில் இணையதளம் வாயிலாக 33,043 மனுக்களும், நேரடியாக 24,183 மனுக்களும் என மொத்தம் 57,226 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களில் பெயர் சேர்க்க 25,777 மனுக்களும், பெயர் நீக்க 23,180 மனுக்களும், திருத்தம் மேற்கொள்ள 8,269 மனுக்களும் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், மனுக்களின் உண்மைத்தன்மை குறித்தும், வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் வள்ளலார் நேற்று ஆய்வு மேற்கொண்டார். புதுக்கோட்டை சின்னப்பாநகர் முதலாம்வீதி, மாலையீடு சண்முகா நகர் மற்றும் வாகவாசல் கிராமம் ஆகிய இடங்களில் களஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பதிவு அலுவலர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், தாசில்தார்கள், நகராட்சி ஆணையர்கள் ஆகியோர்களுடன், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, வருவாய் கோட்டாட்சியர்கள் முருகேசன் (புதுக்கோட்டை), மாரி (பொறுப்பு) (இலுப்பூர்), மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கருணாகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் கணேசன், தேர்தல் தாசில்தார் கலைமணி, தாசில்தார்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.