'தமிழகத்தில் 6-ந்தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்' - சத்யபிரதா சாகு தகவல்
|தமிழகத்தில் வரும் 6-ந்தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னை,
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 294 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதே சமயம் 'இந்தியா' கூட்டணி 231 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றியை உறுதி செய்துள்ளது.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், இன்று காலையில் இருந்து வாக்கு எண்ணிக்கை சுமூகமாக நடைபெற்று வருவதாகவும், எந்த விதமான புகாரும் இதுவரை வரவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் வரும் 6-ந்தேதி வரை அமலில் இருக்கும் என்றும், அதன் பிறகு விலக்கிக் கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
நெல்லையில் 30 சதவீதம் தபால் வாக்குகள் செல்லாது என்று அறிவித்தது தொடர்பான புகார் குறித்து தேர்தல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று குறிப்பிட்ட அவர், வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து நேரடியாக தகவல் வெளியிடப்படும் என்றும், இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.