< Back
மாநில செய்திகள்
நாடாளுமன்றத்துக்கு முன் கூட்டியே தேர்தல் நடக்கலாம்
வேலூர்
மாநில செய்திகள்

நாடாளுமன்றத்துக்கு முன் கூட்டியே தேர்தல் நடக்கலாம்

தினத்தந்தி
|
24 July 2023 12:25 AM IST

நாடாளுமன்றத்திற்கு முன் கூட்டியே தேர்தல் நடந்தாலும் நடக்கலாம் என காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

ஆலோசனை கூட்டம்

காட்பாடி மேற்கு ஒன்றிய தி.மு.க., பொது உறுப்பினர்களுடனான ஆலோசனை கூட்டம் காட்பாடியில் நேற்று நடந்தது. ஒன்றிய அவைத்தலைவர் ராஜா தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் தனிகாசலம் வரவேற்றார்.

கட்சியின் பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடந்தாலும் நடக்கலாம். இருளில் செல்லும் போது வழியில் பாம்பு வரலாம் என்ற முன்யோசனையில் கையில் கம்பு எடுத்து செல்வோம். அதை போன்று எதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

ராஜதந்திரத்தை...

காவிரி பிரச்சினைக்காக 17 ஆண்டுகளாக நடுவர் மன்றத்தில் போராடினோம். அதன் ஒவ்வொரு அடியும் எனக்குத் தெரியும்.

இதில் அன்னிய மாநிலத்துடன் நாம் ராஜதந்திரத்தை கையாள வேண்டும். கேரள, கர்நாடகத்தில் அங்கு பிரபலமான புதியவர்கள் வந்திருக்கிறார்கள். அவசரப்படக் கூடாது. அதற்காக தான் பொறுமையுடன், பணிவான பதிலை அளித்திருக்கிறோம். ஆனால், பத்திரிகைகளில் தான் மேகதாது குறித்து பரபரப்பாக செய்தி வருகிறது.

நினைத்த மாத்திரத்தில் அணை கட்ட முடியாது. ஒரு அணை கட்ட மத்திய அரசிடம் பல அனுமதிகள் வாங்க வேண்டும்?, அணையின் கீழ் பகுதி இசைவு இல்லாமல் அணையை கட்ட முடியாது. எல்லாம் எனக்குத் தெரியும். இதில் 20 வருட அனுபவம் இருக்கிறது. எடுத்த எடுப்பில் எல்லாம் செய்து விட முடியாது.

சிப்காட் தொழிற்சாலை

காட்பாடி தொகுதிக்கு என்ன செய்ய வேண்டுமோ? அனைத்தையும் செய்திருக்கிறோம். இந்த தொகுதிக்கு தொழிற்சாலை ஒன்று வேண்டும் என்று சிப்காட் மற்றும் டைடல் பார்க் கொண்டு வர இருக்கிறோம். டெல் மற்றும் மகிமண்டலத்தில் அதற்கான இடம் இருக்கிறது. தொழில்துறை அமைச்சர் ராஜா அடுத்த மாதம் 4-ந் தேதி இங்கு வருகிறார். அவர் பார்வையிட்ட பிறகு எங்கு என்ன வரும்? என்று தெரியவரும்.

இந்த தொகுதியில் 100 ஓட்டுகளுக்கு 10 பேரை ஒதுக்கியிருக்கிறோம். 10 பேரும் ஒழுங்காக கவனம் செலுத்தினால், 100 ஓட்டு வரும், ஜெயித்து விடலாம். 10 பேரும் ஆளுக்கு ஒரு பக்கம் போனால் ஒன்றும் செய்ய முடியாது. கடந்த முறை அரக்கோணம் தொகுதியில் ஜெகத்ரட்சகன் 56 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தார்,

60 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில்...

இந்த முறை 60 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் சரவணன், காட்பாடி தெற்கு பகுதி செயலாளரும், துணை மேயருமான எம்.சுனில்குமார், வடக்கு பகுதி செயலாளர் வன்னியராஜா, காட்பாடி ஒன்றிய குழுத்தலைவர் வேல்முருகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்