< Back
மாநில செய்திகள்
பரங்கிமலை-பல்லாவரம் கண்டோன்மெண்ட் போர்டுக்கு ஏப்ரல் 30-ந்தேதிக்குள் தேர்தல் - பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு
சென்னை
மாநில செய்திகள்

பரங்கிமலை-பல்லாவரம் கண்டோன்மெண்ட் போர்டுக்கு ஏப்ரல் 30-ந்தேதிக்குள் தேர்தல் - பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு

தினத்தந்தி
|
20 Feb 2023 10:03 AM IST

பரங்கிமலை-பல்லாவரம் கண்டோன்மெண்ட் போர்டுக்கு ஏப்ரல் மாதம் 30-ந்தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கண்டோன்மெண்ட் போர்டு

சென்னையை அடுத்த பரங்கிமலை-பல்லாவரம் கண்டோன்மெண்ட் போர்டு ராணுவ அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு பொதுமக்களும் வசிப்பதால் சாலை, குடிநீர், பள்ளிக்கூடங்கள் போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்ற 7 ராணுவ அதிகாரிகளும், 7 மக்கள் பிரதிநிதிகளும் கொண்ட நிர்வாகம் செயல்படும்.

இந்த போர்டுக்கு சென்னை மண்டல ராணுவ பிரிக்கேடியர் தலைவராகவும், மக்கள் பிரதிநிதிகளில் ஒருவர் துணைத்தலைவராகவும் இருப்பார்கள். போர்டு நிறைவேற்றும் திட்டங்களை செயல்படுத்த கண்டோன்மெண்ட் போர்டு நிர்வாக செயல் அதிகாரி இருப்பார். இங்கு நிறைவேற்றும் பணிகளுக்கு ராணுவ அமைச்சகத்தில் இருந்து நிதி ஒதுக்கப்படும். இந்தியா முழுவதும் 62 கண்டோன்மெண்ட் போர்டுகள் உள்ளன. இதில் 56 கண்டோன்மெண்ட் போர்டுகளில் மக்கள் பிரதிநிதிகள் கொண்டு செயல்படுகிறது.

தேர்தல்

தமிழகத்தில் பரங்கிமலை- பல்லாவரம் மற்றும் வெல்லிங்டன் ஆகிய 2 கண்டோன்மெண்ட் போர்டுகள் உள்ளன. சென்னை பரங்கிமலை- பல்லாவரம் கண்டோன்மெண்ட் போர்டில் 7 வார்டுகள் உள்ளன. 2015-ம் ஆண்டு இந்த கண்டோன்மெண்ட் போர்ட்டுக்கு தேர்தல் நடந்தது.

இதில் 1-வது வார்டுக்கு ஜெயந்தி மாலா (அ.தி.மு.க.), 2-வது வார்டில் எம்.எஸ்.டி. தேன்ராஜா (அ.தி.மு.க.), 3-வது வார்டில் குணசேகரன் (அ.தி.மு.க.), 4-வது வார்டில் லாண்வயா (அ.தி.மு.க.), 5-வது வார்டில் ஒ.ஆனந்த்குமார்(அ.தி.மு.க.), 6-வது வார்டில் விஜய்சங்கர் (தி.மு.க.), 7-வது வார்டில் சொக்கம்மாள்(அ.தி.மு.க.) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

ஏப்ரல் 30-ந்தேதிக்குள்...

இவர்களின் பதவி காலம் 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் முடிந்து விட்டது. இதனால் கண்டோன்மெண்ட் போர்ட்டுக்கு தேர்தல் நடத்த கூடிய வகையில் பெண்களுக்கான வார்டுகள் பிரிக்கப்பட்டன. அதில் 4-வது வார்டு பெண் (தாழ்த்தப்பட்டோர்), 6-வது வார்டு பெண் (பொது) என குலுக்கல் மூலமாக தேர்ந்து எடுக்கப்பட்டது. ஆனால் நிர்வாக காரணங்களுக்காக கடந்த 3 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் கண்டோன்மெண்ட் போர்டுக்கு வருகிற ஏப்ரல் மாதம் 30-ந்தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த உத்தரவு இந்தியா முழுவதும் உள்ள 56 கண்டோன்மெண்ட் போர்டுக்கும் பொருந்தும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்