சென்னை
மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் பள்ளியில் தேர்தல் திருவிழா: பள்ளி, வகுப்பு தலைவியை ஓட்டுபோட்டு தேர்வு செய்த மாணவிகள்
|மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் பள்ளியில் நடந்த தேர்தல் திருவிழாவில் பள்ளி மற்றும் வகுப்பு தலைவியை மாணவிகள் ஓட்டுப்போட்டு தேர்வு செய்தனர். வாக்களித்தவர்களின் கை விரலில் ‘மை’ வைக்கப்பட்டது.
ஜனநாயக நாடுகளின் தலை எழுத்தை தீர்மானிப்பது தேர்தல். அதேபோல் சென்னையை அடுத்த மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இடையே ஒரு தலைமையை நிர்ணயம் செய்யவும், தேர்தல் மற்றும் ஓட்டுரிமை பற்றி மாணவிகள் தங்கள் பள்ளி பருவத்திலேயே தெரிந்து கொள்ளவும் விழிப்புணர்வுக்கான 'பள்ளி தேர்தல் திருவிழா' நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் கே.சந்திரமோகன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை ஜெகஜோதி முன்னிலை வகித்தார். நாடார் உறவின்முறை மூத்த உறுப்பினர் சவுந்திரபாண்டி தேசியகொடி ஏற்றினார். சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மணலி பாலா, பள்ளி கொடியை ஏற்றினார். பின்னர் மாணவிகளுக்கான தேர்தலை தொழில் அதிபர் ஆறுமுகசாமி தொடங்கி வைத்தார்.
இதையடுத்து வகுப்புகளுக்கான தலைவி மற்றும் பள்ளி முழுவதற்குமான தலைவி என தனித்தனியாக தேர்தல் நடைபெற்றது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 3 நாட்களுக்கு முன்பு நடந்தது. அதன்படி வகுப்பு தலைவி மற்றும் பள்ளி முழுவதற்குமான தலைவி பதவியில் போட்டியிட விரும்புபவர்கள் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்து இருந்தனர்.
நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பொது தேர்தல் போன்றே தனித்தனியாக வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. மாணவிகள் வரிசையில் நின்று, வாக்கு சீட்டு மூலம் வாக்களித்தனர். ஓட்டு போட்ட மாணவிகளின் கை விரலில் அடையாள 'மை' வைக்கப்பட்டது.
அதன்பிறகு மாணவிகள் அளித்த வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்பட்டது. தங்கள் பள்ளி மற்றும் வகுப்பு தலைவியை ஓட்டுப்போட்டு தேர்வு செய்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக மாணவிகள் தெரிவித்தனர். இந்த தேர்தல் திருவிழாவில் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.