நாமக்கல்
மகாமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா
|பொத்தனூர் மகாமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கம்பம் நடுதலுடன் தொடங்கியது.
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் புதுப்பாளையம் மகாமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த 7-ந் தேதி இரவு கிராம சாந்தி, கம்பம் நடுதல் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அலங்காரங்களும் நடைபெற்றது. நேற்றுமுன்தினம் பூச்சொரிதல் விழாவும், இன்று (ஞாயிற்றுக்கிழமை) மறு காப்பு கட்டுதலும் நடைபெறுகிறது. நாளை (திங்கட்கிழமை) முதல் 20-ந் தேதி வரை அம்மன் தினமும் இரவு சிம்ம, ரிஷப வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலாவரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 21-ந் தேதி மாலை வடிசோறு, மாவிளக்கு மற்றும் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 22-ந் தேதி அதிகாலை அம்மன் ரதம் ஏறுதலும், மாலை மகா மாரியம்மன் தேரில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 23-ந் தேதி மாலை தீமிதி விழாவும், பெண்கள் பூவாரி போட்டுக் கொள்ளும் நிகழ்ச்சியும், 24-ந் தேதி பொங்கல் மாவிளக்கு, அக்னி சட்டி, அலகு குத்துதல் மற்றும் இரவு வாண வேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 25-ந் தேதி கம்பம் ஆற்றுக்கு செல்லுதலும், கிடா வெட்டும் நிகழ்ச்சியும், 26-ந் தேதி மஞ்சள் நீராடலும், இரவு அம்மன் முத்துப்பல்லக்கில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், 27-ந் தேதி ஊஞ்சல் உற்சவமும், 28-ந் தேதி காலை யாக பூஜை மற்றும் மகாதீபாராதனையும் நடைபெறுகிறது.