நெல்லை, கோவை மேயர் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் அறிவுரை
|நெல்லை மேயராக இருந்த சரவணன் மற்றும் கோவை மேயராக இருந்த கல்பனா ஆகியோர் கடந்த 3-ந்தேதி திடீரென ராஜினாமா செய்தனர்.
சென்னை,
காலியாக உள்ள நெல்லை மற்றும் கோவை மேயர் பதவிக்கான தேர்தல் நடத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக நெல்லை மேயராக இருந்த சரவணன் மற்றும் கோவை மேயராக இருந்த கல்பனா ஆகியோர் கடந்த 3-ந்தேதி திடீரென ராஜினாமா செய்தனர்.
இருவரும் தங்களது சொந்த காரணங்கள் காரணமாக மேயர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக தெரிவித்திருந்தனர். இருப்பினும், 2 மேயர்கள் மீதும் வந்த புகார்களின் அடிப்படையில் கட்சி தலைமை வற்புறுத்தியதால், அவர்கள் இருவரும் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. ஆளும் கட்சியின் மேயர்கள் 2 பேர் ராஜினாமா செய்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் காலியாக உள்ள நெல்லை மற்றும் கோவை மேயர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவதற்காக மாநகராட்சி கூட்டங்களை நடத்தி மேயரை தேர்வு செய்ய வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர்கள் / மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது. மேலும் ஏனைய நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலி பதவிகளுக்கும் மறைமுக தேர்தல் நடத்த உத்தரவிட்டுள்ளது.