சென்னை
சாலையோரம் நின்ற கன்டெய்னர் லாரி மீது மோதி விபத்து - ஆம்புலன்சில் சிகிச்சைக்கு வந்த முதியவர் பலி
|குன்றத்தூர் அருகே சாலையோரம் நின்ற கன்டெய்னர் லாரி மீது மோதிய விபத்தில் ஆம்புலன்சில் சிகிச்சைக்கு வந்த முதியவர் உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 75). இவருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால் மேல் சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக நேற்று முன்தினம் இரவு ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டார். ஆம்புலன்சில் அவருடைய மனைவி ஜெபமாலை (65), மருமகன் சந்திரசேகர் (35) ஆகியோர் உடன் வந்தனர். ஆம்புலன்சை டிரைவர் ராஜா (24) ஓட்டி வந்தார்.
தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் குன்றத்தூர் அடுத்த கோவூர் அருகே சென்றபோது சாலையின் ஓரம் பஞ்சராகி நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரியின் பின்பகுதியில் ஆம்புலன் ஸ்வேகமாக மோதியது. இதில் ஆம்புலன்சின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது.
இதில் ஆம்புன்சில் பயணம் செய்த 4 பேரும் காயம் அடைந்தனர். அவர்களை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே கண்ணன் பரிதாபமாக இறந்தார். அவருடைய மனைவி ஜெபமாலை, மருமகன் சந்திரசேகர், டிரைவர் ராஜா ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்து நடப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு வரை சந்திரசேகர், ஆம்புலன்சின் முன்இருக்கையில் டிரைவருக்கு அருகில் அமர்ந்து இருந்தார். பின்னர் மாமனாருடன் பேசுவதற்காக பின்னால் சென்று அமர்ந்ததால் அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது