சென்னை
தண்டையார்பேட்டை ரெயில் நிலையம் அருகே முதியவர் கழுத்தை அறுத்து கொலை - செல்போனுக்காக கொன்றனரா?
|தண்டையார்பேட்டை ரெயில் நிலையம் அருகே முதியவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். பணம், செல்போனுக்காக கொலை நடந்ததா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை தண்டையார்பேட்டை ெரயில் நிலையம் அருகே நேற்று காலை 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அந்த வழியாக சென்ற ெபாதுமக்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆர்.கே.நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொலையான முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்த முதியவர் அதே பகுதியைச் சேர்ந்த ராமு (வயது 61) என்பது தெரியவந்தது. குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக அந்த பகுதியில் சாலையோரம் வசித்து வந்த அவர், கூலி வேலை செய்து பிழைத்து வந்தார். அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போன் மாயமாகி இருந்தது.
எனவே நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் அவரிடம் இருந்த பணம், செல்போனை பறிக்க முயன்றபோது அவர் மறுத்ததால், அவரை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, செல்போன், பணத்தை பறித்து சென்றனரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்தில் அர்.கே.நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.