< Back
மாநில செய்திகள்
ஜெயலலிதாவின் சொத்துக்களில் பங்கு கேட்டு முதியவர் ஐகோர்ட்டில் வழக்கு
மாநில செய்திகள்

ஜெயலலிதாவின் சொத்துக்களில் பங்கு கேட்டு முதியவர் ஐகோர்ட்டில் வழக்கு

தினத்தந்தி
|
31 Jan 2023 10:53 AM GMT

கர்நாடக மாநிலம் மைசூர் வியாசரபுராவைச் சேர்ந்த 83 வயதான வாசுதேவன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து உள்ளார்

சென்னை

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அதனைத் தொடர்ந்து தான் தான் ஜெயலலிதாவின் மகள் என்று ஒருவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்க அது தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் என்று வாசுதேவன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கர்நாடக மாநிலம் மைசூர் வியாசரபுராவைச் சேர்ந்த 83 வயதான வாசுதேவன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், கூறி இருப்பதாவது:-

என்னுடைய பெற்றோர் ஆர்.ஜெயராம் ஜெ.ஜெயம்மா. இவர்களுக்கு நான் ஒரே வாரிசு. என் தந்தை வேதவல்லி என்ற வேதம்மாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஜெயக்குமார், ஜெயலலிதா ஆகியோர் பிறந்தனர்.

இந்த வகையில் ஜெயக்குமாரும்,ஜெயலலிதாவும் என்னுடைய சகோதரர் மற்றும் சகோதரி ஆவர். 1950-ம் ஆண்டில் என் தந்தையிடம் ஜீவனாம்சம் கேட்டு மைசூர் கோட்டில் என் அம்மா வழக்கு தொடர்ந்தபோது, வேதவல்லி அவரது வாரிசுகள் ஜெயக்குமார், ஜெயலலிதா ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்த்தார். ஆனால், இந்த வழக்கு சமரசத்தில் முடிந்துவிட்டது.

ஜெயலலிதா இறப்பதற்கு முன்பு ஜெயக்குமார் இறந்து விட்டார். ஆனால் இன்றைய தினத்தில் சகோதரன் என்ற முறையில் ஜெயலலிதாவின் நேரடி வாரிசு நான் மட்டுமே உள்ளேன். எனவே ஜெயலலிதாவின் சொத்துக்களில் 50 சதவீதம் எனக்கு தர வேண்டும். தீபா, தீபக் தான் சட்டப்படி வாரிசு என்று அறிவித்து 2020-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்டதால் ஐக்கோர்ட்டு நிர்வாக உத்தரவிற்காக மாஸ்டர் நீதிமன்றத்தில் இம்மனு விசாரணை செய்யப்பட்டது. மனுவை பட்டியலிடுவது தொடர்பாக ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோர் பதிலளிக்கும்படி மாஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணை வரும் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

மேலும் செய்திகள்