சென்னை
மகன்கள் பணம் தராததால் சாப்பாட்டுக்கு கஷ்டப்படுவதாக வயதான தம்பதி மனு - நேரில் ஆஜராக கோட்டாட்சியர் உத்தரவு
|பெற்றோருக்கு பணம் தராத மகன்களை நேரில் ஆஜராக கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கிண்டி,
சென்னை கிண்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு குறை கேட்பு முகாம் நடந்தது. கிண்டி கோட்டாட்சியர் அருளானந்தம் தலைமை தாங்கினார். சமூக நல தாசில்தார்கள் ராமன்(கிண்டி), புவனேஸ்வரி(ஆலந்தூர்), வித்யா(மயிலாப்பூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் உதவி தொகைக்கான உத்தரவுகளை வழங்கிய கோட்டாட்சியர், உதவி தொகை கேட்டு 30-க்கும் மேற்பட்டவர்கள் தந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அப்போது வேளச்சேரியை சேர்ந்த அரிகிருஷ்ணன் (வயது 75) என்பவர் தனது மனைவியுடன் வந்து மனு கொடுத்தார். அதில், "கடந்த ஒரு வருடமாக எங்களது 3 மகன்களும் பணம் தராததால் சாப்பாட்டுக்கே கஷ்டமாக இருக்கிறது. மாதந்தோறும் மகன்கள் செலவுக்கு பணம் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரி இருந்தார்.
இதேபோல் சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த சூரியபிரகாஷ் (70) என்பவர் கொடுத்த மனுவில், "என்னை முதியோர் இல்லத்தில் சேர்த்த மகன், மாதந்தோறும் பணம் தருவதாக கூறினார். ஆனால் முதியோர் இல்லத்துக்கு பணம் தராததால் கஷ்டப்படுகிறேன். மாதந்தோறும் மகனிடம் இருந்து பணத்தை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரி இருந்தார்.
இந்த 2 மனுக்களையும் பெற்ற கோட்டாட்சியர் அருளானந்தம் சம்பந்தப்பட்ட முதியவர்களின் மகன்களுக்கு நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டார்.