< Back
மாநில செய்திகள்
சென்னிமலை அருகே நகை, பணத்துக்காக வயதான தம்பதி படுகொலை
மாநில செய்திகள்

சென்னிமலை அருகே நகை, பணத்துக்காக வயதான தம்பதி படுகொலை

தினத்தந்தி
|
9 Sept 2023 9:52 PM IST

சென்னிமலை அருகே தோட்டத்து வீட்டில் வசித்த வயதான தம்பதியை கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வயதான தம்பதி

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள முருங்கத்தொழுவு ஊராட்சிக்குட்பட்ட ஒட்டன்குட்டை கரியாங்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 85). இவருடைய மனைவி சாமியாத்தாள் (74). இவர்களுக்கு வசந்தி (55), கலையரசி (50), கவிதா (45) என்ற 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர்.

இதில் 2-வது மகள் கலையரசி பெருந்துறை அருகே தோப்புப்பாளையத்தில் வசித்து வருகிறார். இவர் அடிக்கடி கரியங்காட்டு தோட்டத்தில் வசிக்கும் தனது தாய், தந்தையை பார்த்து விட்டு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் மாலையும் வழக்கம்போல் கலையரசி தனது தாய், தந்தையை பார்த்து விட்டு சென்றுள்ளார்.

படுகொலை

இந்தநிலையில் திங்கட்கிழமை காலை நடைபெறும் உப்பிலிபாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு தீர்த்தம் எடுத்து செல்வதற்கு தனது பேரன் (கலையரசியின் மகன்) அஜீத் (26) என்பவரை ஏற்கனவே முத்துசாமி அழைத்துள்ளதாக தெரிகிறது.

அதன்பேரில் காலை 7 மணி அளவில் கரியாங்காட்டு தோட்டத்தில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு அஜீத் சென்றார். அப்போது வீட்டின் வெளிப்புற கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது முத்துசாமியும், சாமியாத்தாளும் முகங்கள் சிதைக்கப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுமட்டுமின்றி வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு துணிகள் சிதறிக்கிடந்தன. பின்னர் இதுகுறித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டு கிடந்த முத்துசாமி, சாமியாத்தாள் ஆகியோரின் உடல்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இரும்பு கம்பி போன்ற ஆயுதத்தால் முத்துசாமியையும், சாமியாத்தாளையும் கொள்ளையர்கள் அடித்து கொன்று இருக்கலாம் என்று போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்பின்னர் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

நகை, பணம் கொள்ளை

முத்துசாமியின் வீட்டில் பீரோவில் இருந்த சுமார் 15 பவுன் தங்க நகைகள் மற்றும் கரும்பு விற்று வைத்திருந்த பணம் ரூ.60 ஆயிரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்