சென்னை
மனிதாபிமானமின்றி உறவுகளால் கைவிடப்படும் முதியோர் தாம்பரம் ரெயில், பஸ் நிலையங்களில் தஞ்சம் - மனிதநேயத்துடன் கை கொடுக்கும் போலீசார்
|மனிதாபிமானமின்றி உறவுகளால் கைவிடப்படும் முதியோர் தாம்பரம் ரெயில், பஸ் நிலையங்களில் தஞ்சம் அடைகின்றனர். அவர்களை மனிதநேயத்துடன் போலீசார் மீட்டு வருகின்றனர்.
தமிழகத்தின் நுழைவு வாயில் என அழைக்கப்படும் தாம்பரம் பகுதியில் நூற்றுக்கணக்கான ரெயில்களில் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் நகருக்கு வருகின்றனர். இப்படி வரும் ரெயில்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மனிதாபிமானமின்றி உறவுகளால் கைவிடப்பட்டும், வீடுகளில் இருந்து விரட்டப்படும் முதியவர்கள் தஞ்சமடையும் சரணாலயங்களாக தாம்பரம் ரெயில் மற்றும் பஸ் நிலையம் மாறி வருகிறது.
இவ்வாறு உறவுகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் இந்த பகுதிகளில் யாசகம் பெற்று வாழ்ந்து வருகின்றனர். ரெயில் மற்றும் பஸ் நிலையத்தில் கிடைக்கும் இடத்தில் இரவை கழித்துக் கொண்டு கடும் குளிரில் தவித்து வருகின்றனர். இவ்வாறு இரக்கமற்ற உறவுகளால் கைவிடப்பட்ட முதியவர்களுக்கு உறவாய் கைகொடுத்து காவல்துறையினர் மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருவது அனைத்து தரப்பினரின் பாராட்டுகளை பெற்றுள்ளது.
தாம்பரம் ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையம் பகுதிகளில் தவித்து வந்த முதியவர்களை தாம்பரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையிலான போலீசார் கருணை உள்ளம் அறக்கட்டளையினருடன் இணைந்து மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட முதியவர்களுக்கு முடித்திருத்தம் செய்து குளிப்பாட்டி புத்தாடைகளை கொடுத்து அணிய வைத்து அவர்களிடம் அன்போடு விசாரித்து எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்ற விவரங்களை தெரிந்து கொள்கின்றனர். உறவினர்களால் விரட்டப்பட்ட முதியவர்களின் சொந்தங்களுக்கு தகவல் கொடுக்கின்றனர். இதில் தங்களால் கைவிடப்பட்ட உறவுகளை மீட்க வந்த சொந்தங்களிடம் முதியவர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என அறிவுரை கூறி அவர்களோடு அனுப்பி வைத்து வருகின்றனர்.
தங்களுக்கு யாரும் இல்லை என கூறிய முதியவர்களை அறக்கட்டளை காப்பகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். வயது முதிர்ந்த பெற்றோரை ஈவு இரக்கமின்றி வீடுகளில் இருந்து வெளியேற்றி அவர்களை யாசகம் பெறும் நிலைக்குத் தள்ளிய பிள்ளைகளால் இது போன்ற முதியவர்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் துயரத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
சென்னை புறநகர் பகுதியில் இவர்களை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருவது மனிதநேயமிக்க அனைத்து தரப்பினரின் ஏகோபித்த பாராட்டுகளை பெற்றுள்ளது. போலீசாரின் மனிதநேய பணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.