ராஜ் தாக்கரேவுடன் மராட்டிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே சந்திப்பு
|பா.ஜனதா தலைவர்களை தொடர்ந்து ராஜ் தாக்கரேயை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சந்தித்தார்.
மும்பை,
பா.ஜனதா தலைவர்களை தொடர்ந்து ராஜ் தாக்கரேயை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சந்தித்தார்.
சிவசேனா கடந்த ஜூன் மாதம் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே அணி என 2 ஆக உடைந்தது. இதில் ஷிண்டே அணி, பா.ஜனதாவுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சி அமைத்து உள்ளது. இந்தநிலையில் இந்த கூட்டணியில் ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனாவையும் கொண்டு வர பா.ஜனதா முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பா.ஜனதா மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே, முன்னாள் மந்திரி வினோத் தாவ்டே உள்ளிட்டவர்கள் சந்தித்து இருந்தனர்.
இந்தநிலையில் முதல்-மந்திாி ஏக்நாத் ஷிண்டே நேற்று தாதரில் உள்ள ராஜ் தாக்கரேவின் வீட்டுக்கு சென்றார். விநாயகர் சதுர்த்தியையொட்டி முதல்-மந்திரி, ராஜ்தாக்கரே வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. எனினும் மும்பை மாநகராட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஏக்நாத் ஷிண்டே, ராஜ் தாக்கரே வீட்டுக்கு சென்றது முக்கியதுவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.