கன்னியாகுமரி
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழாதிரளான பக்தர்கள் பங்கேற்பு
|மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
மணவாளக்குறிச்சி:
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
பகவதி அம்மன் கோவில்
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி, சரண கோஷத்துடன் வந்து தரிசனம் செய்வது வழக்கம். இதனால் 'பெண்களின் சபரிமலை' என்றும் அழைக்கப்படுகிறது.
இங்கு கடந்த 5-ந் தேதி மாசிகொடை விழா கொடி ஏற்றத்துடன் தொடங்கி 14-ந் தேதி வரை 10 நாட்கள் நடந்தது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
எட்டாம் கொடை விழா
அதைத்தொடர்ந்து எட்டாம் கொடை விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. காலை 5.30 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை, 7 மணிக்கு பூமாலை, 10 மணிக்கு வில்லிசை, பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜையும் நடைபெற்றது.இதை காண்பதற்காக குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் கோவிலில் பொங்கல் வைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடம் மற்றும் தோப்புகளிலும் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
பக்தர்கள் திரளாக பங்கேற்பு
கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்ததால் கடற்கரைபகுதி, லட்சுமிபுரம் செல்லும் சாலை, மணலிவிளை செல்லும் சாலை, சாஸ்தான் கோவில் சாலை போன்ற இடங்களில் பக்தர்களின் கூட்டமாக காட்சி அளித்தது.
எட்டாம் கொடை விழாவையொட்டி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 25-ந் தேதி மீனபரணிக் கொடைவிழா நடக்கிறது.