< Back
மாநில செய்திகள்
எழும்பூர் ரெயில் நிலைய மேம்பாட்டு பணி திட்டமிட்டபடி முடிவடையும்
சென்னை
மாநில செய்திகள்

எழும்பூர் ரெயில் நிலைய மேம்பாட்டு பணி திட்டமிட்டபடி முடிவடையும்

தினத்தந்தி
|
11 Aug 2023 7:53 AM IST

எழும்பூர் ரெயில் நிலைய மேம்பாட்டு பணிகள் திட்டமிட்டபடி முடிவடையும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை,

அம்ரித் பாரத் ரெயில் நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ரெயில் நிலையங்களை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி நாடு முழுவதும் ஆயிரத்து 309 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது. இதில், தமிழ்நாட்டில் 62 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது.

ஏற்கனவே, சென்னை எழும்பூர், காட்பாடி, மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய 5 ரெயில் நிலையங்கள் முழு வீச்சில் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில், 144 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை எழும்பூர் ரெயில் நிலைய கட்டிடம் மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த ரெயில் நிலையம் ரூ.734 கோடியே 91 லட்சம் மதிப்பில் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. குறிப்பாக, எழும்பூர் ரெயில் நிலைய கட்டிடம் பழமை மாறாமல் மேம்படுத்த திட்டமிடப்பட்டு அதற்கு ஏற்றார்போல் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த ரெயில் நிலையத்தை சராசரியாக நாள்தோறும் 30 ஆயிரம் பேர் வரையில் பயன்படுத்தி வருகின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரெயில் நிலையத்தின் மேம்பாட்டு பணிகளை 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

மேம்படுத்தப்பட்டு வரும் எழும்பூர் ரெயில் நிலையம், விமான நிலையத்தை போன்று பயணிகள் வருகை, புறப்பாடு ஆகியவை தனித்தனியாக பிரிக்கப்பட உள்ளது. பயணிகள் காத்திருப்பு அறை பிரத்யேகமாக அமைக்கப்பட உள்ளது. பார்சல்களை கையாள தனிப்பகுதி, நடை மேம்பாலங்கள், வாகன காப்பகங்கள் ஆகியவை அமைய உள்ளது. பயணிகள் காத்திருப்பு பகுதியிலிருந்து நடைமேடைகளுக்கு மின்தூக்கி மற்றும் எஸ்கலேட்டர் மூலம் செல்லலாம்.

பொது மற்றும் தனியார் வாகனங்களில் வரும் பயணிகள் தங்கு தடையின்றி ரெயில் நிலையத்துக்கு சென்று வரும் வகையில் வெளிப்புறப் பகுதி அமைய உள்ளது. போக்குவரத்து தேவைகளுக்கு ஏற்ப வருங்காலத்தை கருத்தில்கொண்டு கட்டுமானம் அமையும். முதியோர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து பயணிகளும் பயன்படுத்தும் வகையில் கழிவறைகளும், இருக்கைகளும், மின்தூக்கிகளும் நிறுவப்படும். பயணிகள் தனித்தனியாக வந்து சேர 3 நடை மேம்பாலங்கள் அமைய உள்ளது. மேம்பாட்டு பணிகள் திட்டமிட்டபடி 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்