< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில் இருந்து  வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி நிறுத்தம்  கொள்முதல் விலை உயர்வு எதிரொலி
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில் இருந்து வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி நிறுத்தம் கொள்முதல் விலை உயர்வு எதிரொலி

தினத்தந்தி
|
1 Jun 2022 10:09 PM IST

நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் கொள்முதல் விலை உயர்ந்து வருவதால், நாமக்கல்லில் இருந்து வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

நாமக்கல்:

நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் கொள்முதல் விலை உயர்ந்து வருவதால், நாமக்கல்லில் இருந்து வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

4½ கோடி முட்டைகள் உற்பத்தி

நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள்தோறும் 4½ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இவை தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும் தமிழகம் மற்றும் கேரளாவிற்கும் தினசரி விற்பனைக்கு தினசரி அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக முட்டையின் கொள்முதல் விலை அதிகரித்து வருவதால், பெரும்பாலான ஏற்றுமதியாளர்கள் வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உள்ளனர்.

தற்காலிகமாக நிறுத்தம்

இதுகுறித்து முட்டை ஏற்றுமதியாளர்கள் சிலர் கூறியதாவது:- நாமக்கல்லில் இருந்து தினசரி கத்தார், ஓமன், மாலத்தீவு உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில் கோடை காலம் என்பதால் முட்டை உற்பத்தி குறைந்த நிலையில் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.480 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் துருக்கியில் முட்டை விலை இதைவிட ஒரு ரூபாய் குறைவாக உள்ளது. இதனால் உலக சந்தையில் பெரும்பாலான நாடுகளுக்கு துருக்கியில் இருந்து முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. எனவே நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி செய்யப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதனால் இந்த தொழிலில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டு வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்