< Back
மாநில செய்திகள்
வருகிற 15-ந் தேதி முதல்50 கிராமிற்கு மேற்பட்ட முட்டைகள் ஒரே விலையில் விற்பனைதேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு முடிவு
நாமக்கல்
மாநில செய்திகள்

வருகிற 15-ந் தேதி முதல்50 கிராமிற்கு மேற்பட்ட முட்டைகள் ஒரே விலையில் விற்பனைதேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு முடிவு

தினத்தந்தி
|
5 Jan 2023 12:15 AM IST

வருகிற 15-ந் தேதி முதல் 50 கிராமிற்கு மேல் உள்ள முட்டைகள் அனைத்தையும் ஒரே விலையில் விற்பது என தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு முடிவு செய்துள்ளது.

கலந்துரையாடல்

இதுதொடர்பாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல தலைவர் டாக்டர் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சமீபகாலமாக மார்க்கெட்டில் முட்டை இருப்பு அதிகளவில் இல்லாத போதும், தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து 45 முதல் 50 காசுகள் வரை வியாபாரிகள் குறைத்து வாங்குகிறார்கள் என பண்ணையாளர்களிடம் இருந்து தொடர்ந்து புகார் வந்து கொண்டே இருக்கிறது.

இதையடுத்து நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் துணைத் தலைவர் சிங்கராஜ் தலைமையில் நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் மண்டல அலுவலகத்தில் வியாபாரிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

ஒரே விலையில் முட்டை விற்பனை

இந்த கூட்டத்தில் வருகிற 15-ந் தேதி முதல் 50 கிராமிற்கு மேற்பட்ட முட்டைகள் அனைத்தையும் ஒரே விலையில் விற்பது என முடிவு எடுக்கப்பட்டது. அதாவது எக்ஸ்போர்ட் சைஸ், கரெக்ட் சைஸ், பெரிய முட்டை என இதுவரை இருந்த நடைமுறை மாற்றப்பட்டு, 50 கிராமுக்கு மேற்பட்ட அனைத்து முட்டைகளும் பெரிய முட்டை என விற்கப்படும். 45 கிராமில் இருந்து 49 கிராம் வரை உள்ள முட்டைகள் ஒரே விலையில் விற்கப்படும். 40 கிராமில் இருந்து 44 கிராம் வரை உள்ள முட்டைகள் ஒரே விலையில் விற்கப்படும்.

இந்த முடிவுகளை நடைமுறைப்படுத்தும் வகையில் வருகிற நாட்களில் நாமக்கல் மண்டலத்துக்கு உட்பட்ட பல்லடம், ஈரோடு, மோகனுார், பரமத்தி, புதன்சந்தை, ராசிபுரம் மற்றும் நாமக்கல் வட்டார குழு தலைவர்கள், அந்தந்த வட்டாரத்துக்கு உட்பட்ட கோழிப்பண்ணையாளர்களை அழைத்து, இந்த நடைமுறையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நஷ்டத்தை தவிர்க்க முடியும்

வட்டாரக்குழு கூட்டத்தில் பண்ணையில் முட்டை எடுக்கும் அனைத்து வியாபாரிகளையும் அழைத்து இது குறித்து தெரிவிக்க வேண்டும். அனைவரும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே முட்டை விற்பனையில் நமக்கு ஏற்படும் அதிகப்படியான நஷ்டத்தை தவிர்க்க முடியும். பண்ணையாளர்கள் ஒருங்கிணைந்து முட்டை விற்பனையில் ஏற்படும் நஷ்டத்தை தவிர்த்தால் மட்டுமே, தொழிலில் தொடர்ந்து பயணிக்க முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்