< Back
மாநில செய்திகள்
முதல் முறையாக  நாமக்கல்லில் இருந்து மலேசியாவிற்கு   54 ஆயிரம் முட்டைகள் ஏற்றுமதி  கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தலைவர் சிங்கராஜ் தகவல்
நாமக்கல்
மாநில செய்திகள்

முதல் முறையாக நாமக்கல்லில் இருந்து மலேசியாவிற்கு 54 ஆயிரம் முட்டைகள் ஏற்றுமதி கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தலைவர் சிங்கராஜ் தகவல்

தினத்தந்தி
|
16 Dec 2022 12:15 AM IST

நாமக்கல் மண்டலத்தில் இருந்து முதல் முறையாக மலேசியாவிற்கு விமானம் மூலம் 54 ஆயிரம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

முட்டை ஏற்றுமதி

வெளிநாடுகளில் தீவன மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக முட்டை உற்பத்தி குறைந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி அதிகரித்து வருகிறது.

குறிப்பாக நாமக்கல் மண்டலத்தில் இருந்து துபாய், மஸ்கட், கத்தார் மற்றும் மாலத்தீவு உள்பட பல்வேறு நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மாதம் 8 கோடி முட்டைகள் வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது.

54 ஆயிரம் முட்டைகள்

இந்த நிலையில் நாமக்கல் மண்டலத்தில் இருந்து முதல் முறையாக மலேசியாவிற்கு முட்டை ஏற்றுமதி தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக உரிய பரிசோதனைக்கு பிறகு 54 ஆயிரம் முட்டைகள் விமான மூலம் மலேசியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவரும், முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவருமான சிங்கராஜ் கூறியதாவது:-

நாமக்கல் மண்டலத்தில் இருந்து கடந்த 2 மாதங்களாக வெளிநாடுகளுக்கு மாதம் 8 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது முதன் முறையாக மலேசியாவிற்கு விமானம் மூலம் 54 ஆயிரம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.

அதிகரிக்க வாய்ப்பு

அங்கு பரிசோதனை முடிந்த பிறகு சில நாட்களில் வாரம் 20 கன்டெய்னர்களில் சுமார் 1 கோடி முட்டைகள் வீதம் மாதம் 4 கோடி முட்டைகள் மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட வாய்ப்புள்ளது. இதைத்தொடர்ந்து சிங்கப்பூர் உள்பட பல்வேறு நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்ய வாய்ப்பு உருவாகும். அதன் மூலம் முட்டை விலை உயர்வதோடு, நிலையான விலை கிடைக்கும்.

தற்போது 8 கோடி முட்டைகள் வரை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மலேசியாவிற்கு முட்டை ஏற்றுமதி அதிகரிக்கும்போது 15 கோடி முட்டைகள் வரை ஏற்றுமதியாக வாய்ப்பு உள்ளது.

பறவை காய்ச்சல்

பண்ணை பராமரிப்பு, வாகனங்களை மருந்து அடித்த பிறகு பண்ணைகளுக்குள் அனுமதிப்பது, வெளி ஆட்களை கிருமிநாசினி உபயோகித்த பிறகு அனுமதிப்பது என பல்வேறு நடவடிக்கைகள் கோழிப்பண்ணைகளில் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் நாமக்கல் பகுதியில் பறவை காய்ச்சலுக்கு வாய்ப்பு இல்லை. பராமரிப்பு மற்றும் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது சங்கத்தின் செயலாளர் சுந்தரராஜ், பொருளாளர் இளங்கோ, முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்க செயலாளர் வல்சன் ஆகியோர் உடன் இருந்தனர்.


மேலும் செய்திகள்