நாமக்கல்
உலகக்கோப்பை கால்பந்து போட்டி எதிரொலி: கத்தாருக்கு 2½ கோடி முட்டைகள் ஏற்றுமதி
|உலகக்கோப்பை கால்பந்து போட்டி காரணமாக நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு இதுவரை சுமார் 2 கோடியே 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருப்பதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.
4½ கோடி முட்டைகள் உற்பத்தி
நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு நாள்தோறும் சுமார் 4½ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை தமிழக அரசின் சத்துணவு திட்டம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
மேலும் குவைத், ஈரான், கத்தார், மாலத்தீவு, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக கத்தாரில் நடைபெறும் உலகக்கால்பந்து போட்டி எதிரொலியாக நாமக்கல் மண்டலத்தில் இருந்து முட்டை ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
2½ கோடி முட்டைகள் ஏற்றுமதி
முன்னதாக கத்தாருக்கு 50 லட்சம் முட்டைகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், உலகக்கோப்பை கால்பந்து போட்டி எதிரொலியாக அது 1½ கோடி முட்டைகளாக கடந்த மாதம் உயர்ந்தது.
தற்போது மேலும் சுமார் 1 கோடி முட்டைகள் கத்தாருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும், இதுவரை மொத்தமாக சுமார் 2 கோடியே 50 லட்சம் முட்டைகள் நாமக்கல் மண்டலத்தில் இருந்து கத்தாருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும், வருகிற ஜனவரி மாதத்திற்குள் மேலும் 2 கோடி முட்டைகள் வரை கத்தாருக்கு ஏற்றுமதி செய்யப்பட இருப்பதாகவும் ஏற்றுமதியாளர் டாக்டர் பி.வி.செந்தில் கூறினார்.
=======