நாமக்கல்
முட்டை விலை தொடர் சரிவு: ஒரே வாரத்தில் பண்ணையாளர்களுக்கு ரூ.25 கோடி இழப்பு
|நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து சரிவடைந்து வருவதால் கடந்த ஒரே வாரத்தில் மட்டும் பண்ணையாளர்களுக்கு ரூ.25 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து சரிவடைந்து வருவதால் கடந்த ஒரே வாரத்தில் மட்டும் பண்ணையாளர்களுக்கு ரூ.25 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
முட்டை விலை சரிவு
நாமக்கல் மண்டலத்தில் 1100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் 6 கோடிக்கும் மேல் முட்டையிடும் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு 4 கோடியே 50 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைக்கான விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்கிறது. பொதுவாக தட்பவெட்ப நிலை, பண்டிகை காலங்களின் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு விலைநிர்ணயம் செய்யப்படுகிறது.
அந்த வகையில் கடந்த 1-ந் தேதி 550 காசுகளாக இருந்த முட்டை கொள்முதல் விலை படிப்படியாக குறைந்து 420 காசுகளாக சரிவடைந்துள்ளது. இந்த விலை சரிவு பண்ணையாளர்களை கவலை அடைய செய்துள்ளது.
நஷ்டம்
இதுகுறித்து பண்ணையாளர்கள் சிலர் கூறியதாவது:- 'கோழிகளுக்கான மூலப்பொருட்களின் விலை அதிகரித்து உள்ளதால் ஒரு முட்டை உற்பத்தி செய்வதற்கு, 450 காசுக்கு மேல் ஆகிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு 420 காசுகளாக விலை நிர்ணயம் செய்தாலும், மைனஸ் 40 காசுகள் போக 380 காசுகள் மட்டுமே கிடைக்கிறது.
உற்பத்தி செலவை விட குறைத்து விற்பனை செய்வதால் ஒரு வாரத்தில் பண்ணையாளர்களுக்கு ரூ.25 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கு முடிந்த பிறகே நுகர்வு அதிகரித்து கொள்முதல் விலை உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
முட்டை ஏற்றுமதி தொடங்கியது
இது ஒருபுறம் இருக்க முட்டை கொள்முதல் விலை குறைந்ததால் கடந்த 2 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெளிநாடுகளுக்கான முட்டை ஏற்றுமதி தொடங்கி இருப்பதால் பண்ணையாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்