< Back
மாநில செய்திகள்
புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் 2-ம் கட்டமாககல்லூரி மாணவிகள் 793 பேருக்கு தலா ரூ.1000 உதவித்தொகைகள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் 2-ம் கட்டமாககல்லூரி மாணவிகள் 793 பேருக்கு தலா ரூ.1000 உதவித்தொகைகள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்

தினத்தந்தி
|
10 Feb 2023 12:15 AM IST

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 2-ம் கட்டமாக கல்லூரி மாணவிகள் 793 பேருக்கு தலா ரூ.1000 உதவித்தொகை வழங்குவதற்கான ஆணையை கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்.

கல்வி உதவித்தொகை

புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 2-ம் கட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உயர்கல்வி படிக்கும் கல்லூரி மாணவிகள் 793 பேருக்கு தலா ரூ.1000 உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளி கூட்டரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி, அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் கல்லூரி மாணவிகள் 793 பேருக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

793 பேருக்கு...

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, தற்போது கல்லூரிகளில் உயர்கல்வி படித்து வரும் 793 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெறுவதற்கான ஆணை மற்றும் வங்கி ஏ.டி.எம். அட்டை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி படிப்பில் முதலாமாண்டு முதல் உயர்கல்வி படிப்பு முடிக்கும் வரை மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை பெற்றுக்கொள்ளலாம். அங்கீகரிக்கப்பட்ட டிப்ளமோ, ஐ.டி.ஐ. படிப்புகளில் சேரும் 8, 9 மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகள் 6-ம் வகுப்பு முதல் தமிழக அரசு பள்ளிகளில் படித்திருந்தால் இத்திட்டத்தின்கீழ் பயன்பெற தகுதியுடையவர்கள். ஒருங்கிணைந்த முதுகலை பட்டம் பயின்றால் முதல் 3 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

பொது அறிவை வளர்க்கவேண்டும்

தொலைதூர கல்வி மற்றும் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் மூலம் உயர்கல்வியை தொடரும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது. penkalvi.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக இத்திட்டத்தின்கீழ் பயன்பெற 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகள் விண்ணப்பிக்கலாம். பெண்கள் முன்னேற்றத்திற்காக முதல்-அமைச்சர் மூலம் உருவாக்கப்பட்டுள்ள உன்னதமான புதுமைப் பெண் திட்டத்தினை மாணவிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் பாடப்பிரிவுகளுடன் தினசரி நாளிதழ்களையும் படித்து பொது அறிவினையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். தற்போது அனைத்து அரசு துறைகளிலும் பெண்கள் அதிகம் பணியாற்றி வருகிறார்கள். ஆகவே உயர்கல்வி பயிலும் மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் வழங்கும் உதவித்தொகையை பெற்று பயனடைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, ஒன்றியக்குழு தலைவர்கள் அலமேலு ஆறுமுகம், வடிவுக்கரசி சாமிசுப்பிரமணியன், சாந்தி இளங்கோவன் மற்றும் அரசு அலுவலர்கள், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்