பள்ளி, கல்லூரிகளில் கல்வி தொடர்பான திரைப்படங்கள் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
|பள்ளி, கல்லூரிகளில் கல்வி தொடர்பான திரைப்படங்களை திரையிடுவது குறித்து பரிசீலிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாடு பள்ளி மற்றும் கல்லூரி கல்வி திரைப்பட அமைப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கடந்த 2022-23ம் கல்வியாண்டு வரை பள்ளி, கல்லூரிகளில் கல்வி தொடர்பான திரைப்படங்களை திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியதாகவும், நடப்பு கல்வியாண்டில் இதுவரை உத்தரவு பிறப்பிக்காததால், திரைப்படங்களை திரையிட அனுமதி வழங்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 2024-25ம் கல்வியாண்டில் அனுமதி வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பள்ளி, கல்லூரிகளில் கல்வி தொடர்பான திரைப்படங்களை திரையிடுவது குறித்த கோரிக்கை மனுவை பரிசீலிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.