பெரம்பலூர்
பெரம்பலூரில் நாளை கல்விக்கடன் முகாம்
|பெரம்பலூரில் நாளை நடைபெறவுள்ள கல்விக்கடன் முகாமினை மாணவர்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் ஆணைப்படி பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்தும் மாபெரும் கல்விக்கடன் முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் நடைபெறுகிறது. இந்த முகாமில் தொழில்முறை படிப்பு பயிலும் மற்றும் கல்வி கடன் பெற விரும்பும் அனைத்து மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த முகாமில் கலந்து கொள்ள வரும் மாணவ-மாணவிகள், பெற்றோர்களின் பான் கார்டு, ஆதார் கார்டு ஆவணங்களையும், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் மாணவ-மாணவிகளின் 10, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12-ம் வகுப்பு மாற்று சான்றிதழ், குடும்ப வருமான சான்று, கல்லூரி சேர்க்கைக்கான சான்று, கல்வி சான்று, கல்லூரி கட்டண அறிக்கை ஆகிய ஆவணங்களின் அசல் மற்றும் நகல் சான்றிதழை கொண்டு வர வேண்டும். கல்விக்கடன் முகாமிற்கு வருவதற்கு முன்பாக https://www.jansamarth.in இணையதளத்தில் விண்ணப்பித்து அதன் நகலை கொண்டு வர வேண்டும். தகுதி உள்ள அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் கல்வி கடன் வழங்கப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் நடத்தப்படுகின்ற இந்த முகாமினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.