< Back
மாநில செய்திகள்
மாணவ- மாணவிகளுக்கு கல்விக்கடன் வழங்கும் முகாம்
சேலம்
மாநில செய்திகள்

மாணவ- மாணவிகளுக்கு கல்விக்கடன் வழங்கும் முகாம்

தினத்தந்தி
|
9 Oct 2023 2:13 AM IST

சேலத்தில் வருகிற 15-ந் தேதி கல்விக்கடன் மேளா நடத்துவது தொடர்பாக வங்கி அதிகாரிகளுடன் கலெக்டர் கார்மேகம் ஆலோசனை மேற்கொண்டார்.

சேலத்தில் வருகிற 15-ந் தேதி கல்விக்கடன் மேளா நடத்துவது தொடர்பாக வங்கி அதிகாரிகளுடன் கலெக்டர் கார்மேகம் ஆலோசனை மேற்கொண்டார்.

ஆலோசனை கூட்டம்

சேலம் மாவட்டத்தில் கல்விக்கடன் மேளா நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து வங்கியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, உதவி கலெக்டர் (பயிற்சி) சுவாதிஸ்ரீ, தனி மாவட்ட வருவாய் அலுவலர் கீதாபிரியா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சிவகுமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-

சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் வருகிற 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சோனா தொழில்நுட்ப கல்லூரியில் கல்விக்கடன் மேளா நடத்தப்பட உள்ளது. முகாமில் 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ. படிப்பதற்கும், 12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு பட்டப்படிப்பு படிப்பதற்கும், கல்லூரிகளில் முதலாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரை படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், முதுநிலை கல்வி படித்து கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளும் கல்விக்கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கல்விக்கடன் மேளா

எனவே, கல்விக்கடன்களை பெற விரும்பும் மாணவ, மாணவிகள் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், ரேஷன் அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பான்கார்டு நகல், சாதிச்சான்று நகல் ஆகிய ஆவணங்களை கொண்டு விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் கல்வி கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் வகையில் 'வித்யா லட்சுமி' என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கல்விக்கடன் மேளாவிற்கென அனைத்து கல்லூரிகளிலும் ஒரு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இரண்டு மாணவர்கள் நியமிக்கப்பட்டு, கல்விக்கடன் வழங்குவதற்கு 'வித்யா லட்சுமி' இணைய தளத்தில் விண்ணப்பிக்கும் முறை குறித்த பயிற்சி வருகிற 9-ந் தேதி சோனா கல்லூரி நடைபெற உள்ளது. மேலும், இப்பயிற்சி பெற்ற ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாணவர்கள் தங்கள் கல்லூரிகளுக்கு சென்று இணைதளத்தில் கல்வி கடன் குறித்து விண்ணப்பிக்கும் முறை தொடர்பாக பிற மாணவர்களுக்கு எடுத்துரைப்பார்கள்.

15-ந் தேதி

சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே கல்விக்கடன் தொடர்பாக நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மற்றும் தற்பொழுது இணைதளத்தில் புதியதாக விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் தொடர்பான விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வருகிற 15-ந் தேதி அன்று சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறவுள்ள மாபெரும் கல்விக்கடன் மேளாவில் சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து வங்கி கிளை மேலாளர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

எனவே, சேலம் மாவட்டத்தில் கல்விக்கடன் வேண்டி வங்கிகளில் மற்றும் இணையதளம் மூலம் விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டு, இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

மேலும் செய்திகள்