சேலம்
வாழ்வில் வெற்றி பெற கல்வியோடு ஒழுக்கம் அவசியம்
|வாழ்வில் வெற்றி பெற கல்வியோடு ஒழுக்கம் அவசியம் என்று சேலத்தில் நடந்த உயர்கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசினார்.
வாழ்வில் வெற்றி பெற கல்வியோடு ஒழுக்கம் அவசியம் என்று சேலத்தில் நடந்த உயர்கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசினார்.
கருத்தரங்கம்
தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை சார்பில் "தொட்டு விடும் தூரத்தில் இலக்கு" எனும் தலைப்பில் 2 ஆயிரம் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கம் சேலம் அருகே உடையாப்பட்டி நோட்டரி டேம் ஆப் ஹோலி கிராஸ் பள்ளியில் நேற்று நடந்தது.
வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு உயர்கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒழுக்கம் அவசியம்
தமிழ்நாடு முழுவதும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 38 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் ஏகலைவா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் 2,200 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளில் படிக்கிற அனைவரும் உயர்கல்வி பயிலும் வகையில் வழிகாட்டுதல் கருத்தரங்கு உள்ளிட்ட இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மற்ற மாநிலங்களை காட்டிலும் உயர்கல்விக்கு செல்பவர்களின் எண்ணிக்கை நமது மாநிலத்தில் அதிகமாக இருந்தாலும், இதனை மேலும் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வாழ்வில் வெற்றி பெற கல்வியோடு ஒழுக்கம் மிக அவசியமான ஒன்றாகும். அந்தவகையில் பழங்குடியின மாணவர்களுக்கு கல்விக்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவே, தமிழ்நாடு அரசு பல்வேறு சலுகைகளும், திட்டங்களும் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மாணவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் "நான் முதல்வன் திட்டம்" எனும் வழிகாட்டி திட்டம் பழங்குடி இன மாணவர்களுக்கு மிக பெரிய பலன்களை அளித்து வருகிறது.
விடுதிகளை மேம்படுத்த...
மேலும் தாட்கோ மூலமாக நீட் மற்றும் உயர் படிப்புகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கவும் தாட்கோ மூலமாக உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசு பள்ளியில் தேர்ச்சி சதவிகிதத்தை மேலும் அதிகரிக்க ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் பெற்றோர் பாடுபட வேண்டும். மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளின் விடுதிகளை மேம்படுத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறினார்.
ஆசிரியர்களுக்கு பாராட்டு
தொடர்ந்து சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் செயல்படும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் 2022-23-கல்வியாண்டில் அரசு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார். மேலும், அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் அரசு செயலர் லட்சுமி பிரியா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, பழங்குடியினர் நலத்துறையின் இயக்குநர் அண்ணாதுரை, உதவி கலெக்டர் அம்பாயிரநாதன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கபீர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். சிவலிங்கம், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் ஹேமலதா விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.