< Back
மாநில செய்திகள்
படித்த இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

படித்த இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தினத்தந்தி
|
3 Aug 2023 12:15 AM IST

படித்த இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உதவித்தொகை

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் அலுவலகத்தில் கடந்த ஜூலை 1-ந் தேதி தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் பயன்பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

10-ம் வகுப்பு தோல்வி அல்லது தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பதிவினை தொடர்ந்து புதுப்பித்து அடுத்த மாதம்(செப்டம்பர்) 30-ந் தேதி வரை 5 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

வயது வரம்பு

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 30.09.2023 அன்றைய நிலையில் 45 வயதுக்குள், இதர இனத்தை சார்ந்தவர்கள் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். மாதம் ஒன்றுக்கு 10-ம்வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.300 தோல்விக்கு ரூ.200, மேல்நிலைக்கல்வி தேர்ச்சிக்கு ரூ.400, பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.600 மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10-ம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சிக்கு ரூ.600 மற்றும் மேல்நிலைகல்வி தேர்ச்சிக்கு ரூ.750, பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ஆயிரம் ரூபாய் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

விண்ணப்பபடிவம்

உதவித்தொகை பெற விரும்புவோர் தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாக காண்பித்து கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் அலுவலகத்தில் அனைத்து அலுவலக வேலை நாட்களில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். அல்லது https://employmentexchange.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன்பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தகுதியில்லை. உதவித்தொகை பெறுபவர்களின் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

பூர்த்தி செய்யப்பட்டவிண்ணப்பங்களை வருகிற 31-ந் தேதி வரை அனைத்து அலுவலக வேலைநாட்களிலும் கள்ளக்குறிச்சியில் எண் 18/63, நேப்பால் தெருவில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குப் புத்தகத்துடன் நேரில் சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்