எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு விசாரணை: செப்., 19ம் தேதிக்கு ஒத்தி வைப்பு
|அவதூறு வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டை மறுப்பதாக நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.
சென்னை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது, 'மத்திய சென்னை தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன், அவருடைய நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தை செலவு செய்யவில்லை. அப்படியென்றால், இவர் எப்படி செயல்பட்டிருப்பார் என்பதை மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்' என பேசினார்.
இந்த பேச்சு தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி அவர் மீது தயாநிதிமாறன் எம்.பி., சென்னை எழும்பூர் கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு, சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இந்த சூழலில் இந்த வழக்கு சென்னை சிறப்பு கோர்ட்டில், இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜரானார்.
இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயவேலு முன்பு ஆஜரான எடப்பாடி பழனிசாமி, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுப்பதாக பதில் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனைத்தொடர்ந்து வழக்கு விசாரணை அடுத்த மாதம் (செப்டம்பர்) 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வழக்கறிஞர் இன்பதுரை, "பத்திரிக்கை செய்தி அடிப்படையில்தான் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். அவதூறு வழக்கை தொடர்ந்து நடந்த தயாராக இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தோம்" என்று அவர் கூறினார்.