ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
|ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப் பாதையில் நேற்று மாலை ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் 13-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்றபோது, சுமார் 80 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. விபத்தினால், ஏற்காடு மலைப் பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் உயிரிழந்த 6 பேர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிடவும்; பலத்த காயமடைந்தோருக்கு ரூ. 2 லட்சமும், சிறு காயமடைந்தோருக்கு ரூ. 50 ஆயிரமும், அரசின் சார்பில் நிதியுதவி வழங்கிடவும், உயர் மருத்துவச் சிகிச்சை அளித்திட வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெறவும், மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்றும், எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து கோடை வெயிலை சமாளிக்க, மக்கள் மலை வாசஸ்தலங்களை நோக்கி படையெடுத்துச் செல்கின்றனர். எனவே அரசு உடனடியாக உரிய அதிகாரிகளை பணிக்கு அமர்த்தி, அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் செக்போஸ்ட் அமைத்து, பஸ் மற்றும் இதர வாகன ஓட்டுநர்களை பரிசோதனை செய்யவும், பொதுபோக்குவரத்து ஓட்டுநர்கள் மலைப் பகுதியில் ஓட்டி பழக்கமானவர்களா என்பதை உறுதி செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.