"அமலாக்கத்துறை அதிகாரி போல் எடப்பாடி பழனிசாமி தன்னை நினைத்துக்கொள்கிறார்" - ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்
|அமலாக்கத்துறை அதிகாரி போல் எடப்பாடி பழனிசாமி தன்னை நினைத்துக்கொள்கிறார் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
சென்னை,
அமைச்சர் செந்தில் பாலாஜி அ.தி.மு.க. ஆட்சியின் போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தால் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கோர்ட்டு அனுமதியுடன் இப்போது காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு திமுக மற்றும் திமுக கூட்டனி கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எதிர்கட்சியினர் குற்றச்சாட்டும், விமர்சனமும் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ள கருத்துக்கு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
செந்தில் பாலாஜி நள்ளிரவில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டார். மாரடைப்பு எப்போது யாருக்கு வரும் என்பது தெரியாது; அதனால் அதை நாடகம் எனக்கூறுவது தவறு. விசாரணை என்பது மனித நேயத்துடன் நடைபெற வேண்டும். செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை மனிதநேயத்துடன் நடந்து கொள்ளவில்லை. விசாரணையின் போது செந்தில் பாலாஜிக்கு குடிக்க தண்ணீர் கூட தரவில்லை.
உடல் நலம் பாதித்தவரை மருத்துவமனைக்கு சென்று பார்த்ததில் என்ன தவறு?. மாரடைப்பு குறித்து தெரியாதவர் எப்படி முதலமைச்சராக இருந்தார். இஎஸ்ஐ(ESI)மருத்துவமனை அறிக்கையை எடப்பாடி பழனிசாமி கொச்சைபடுத்தியுள்ளார். அமலாக்கத்துறை அதிகாரி போல் எடப்பாடி பழனிசாமி தன்னை நினைத்துக் கொள்கிறார். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது 1 கோடி ரூபாய்க்கு இட்லி சாப்பிட்டவர்கள்தான் அதிமுகவினர். திமுக அரசுடன் மோத தயாராகி விட்டோம் என கவர்னர் மூலம் மத்திய அரசு உணர்த்துகிறது.
செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டது அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடு புகாரில் தான். பதவிக்காக ஒரு பேச்சும்...பதவிக்கு வந்த பின் வேறு பேச்சு பேசுவது நாங்கள் அல்ல. அதிமுகவினர் மீது போடப்பட்ட வழக்குகளை நிரூபித்து காட்டியுள்ளது. முதல்-அமைச்சரின் கேள்விக்கு பதில் சொல்ல இயலாத எடப்பாடி பழனிசாமி விசாரணை அதிகாரி போல் பேசியுள்ளார். திமுக. அமலாக்கத்துறை சோதனை பற்றி எந்த விதத்திலும் திமுக கவலைப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.