வெள்ளத்தடுப்பு ஏற்பாடுகள் குறித்து எடப்பாடி பழனிசாமி, சீமானுடன் நேரடி விவாதத்துக்கு தயார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
|எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களோ, வேறு கட்சியை சேர்ந்தவர்களோ பொதுமக்களை எங்களிடம் கோபமாக வாக்குவாதம் செய்யச்சொல்லி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்கின்றனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை,
மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை சைதாப்பேட்டை கோதாமேடு பகுதியில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னை மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் 9 மாத குழந்தை முதல் 15 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மிக்ஜம் புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரசு ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி இருப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே மழை வெள்ளம் பாதித்த பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் ரூபெல்லா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். அதனை கடைப்பிடிக்க வேண்டும்.
நிவாரண பொருட்கள் வழங்கப்படும் எந்த இடங்களிலும் பொதுமக்கள் கோபமாக எங்களிடம் பேசுவதில்லை. ஆனால் ஒரு சில இடங்களில் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களோ, வேறு கட்சியை சேர்ந்தவர்களோ பொதுமக்களை எங்களிடம் கோபமாக வாக்குவாதம் செய்யச்சொல்லி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்கின்றனர், அதுபற்றியெல்லாம் நாங்கள் கவலை கொள்ளவில்லை, தொடர்ந்து பொதுமக்களுக்கு உதவிகளை செய்யவே விரும்புகின்றோம்.
நான் ஒருமாத காலத்திற்கு முன்னர் சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகள் குறித்து பேசி 20 செ.மீ மழை வந்தாலும் எங்கும் தண்ணீர் தேங்காது என்று கூறியிருந்தேன், அதனை தற்போது சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து விமர்சித்து வருகின்றனர்.
2015-ம் ஆண்டு பெய்த மழையினை காட்டிலும் தற்போது 2 மடங்கு அதிகமான மழை பெய்துள்ளது. எனவே விமர்சனங்கள் செய்வதற்கு முன்பு தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் பணிகளை கொஞ்சம் மனசாட்சியோடு எண்ணிப்பார்க்க வேண்டும். மேலும், இரவு பகல் பாராமல் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் களப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களின் மனது புண்படாதபடியும் பேச வேண்டும்.
இந்த பெருமழையினை வைத்து அரசியல் செய்ய வேண்டாம், அப்படி அரசியல் செய்தாலும், மழைநீர் வடிகால், வெள்ளத்தடுப்பு ஏற்பாடுகள் குறித்து யார் கேள்வி கேட்டாலும் அது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியாக இருந்தாலும், சீமானாக இருந்தாலும் அல்லது மற்ற கட்சிகளைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுடன் நாங்கள் எதிர் எதிரே அமர்ந்து நேரடியாக விவாதிக்க தயாராகவே உள்ளோம். மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளை நேரிலே அழைத்துச் சென்று காட்ட தயாராகவே உள்ளாம்.
இவ்வாறு அவர் கூறினார்.