பெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை
|தந்தை பெரியாரின் புகழ் ஓங்குக என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பெரியாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன்பின்னர் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "சாதியவாதத்தை, மதவாதத்தை கூரிய கருத்துக்களால் நொறுக்கிய கேள்வித் தடி தந்தை பெரியாரின் தடி. சமத்துவம், சமூகநீதி, பெண் விடுதலை ஆகிய உயரிய கோட்பாட்டு வேள்விகளை நம்மில் விதைத்த அவர்தம் பிறந்தநாளில், அடிப்படைவாதத்திற்கு துளியும் இடமின்றி, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பொதுவுடைமைச் சமூகத்தை கட்டமைக்க உறுதியேற்போம். தந்தை பெரியாரின் புகழ் ஓங்குக" என்று தெரிவித்துள்ளார்.