< Back
மாநில செய்திகள்
முதல்-அமைச்சரை விமர்சிக்க எடப்பாடி பழனிசாமிக்கு அருகதையில்லை - ஆர்.எஸ்.பாரதி
மாநில செய்திகள்

முதல்-அமைச்சரை விமர்சிக்க எடப்பாடி பழனிசாமிக்கு அருகதையில்லை - ஆர்.எஸ்.பாரதி

தினத்தந்தி
|
26 Dec 2023 11:29 PM IST

தோல்வியைத் தோளில் போட்டு வளர்த்து வருகிறவர் எடப்பாடி பழனிசாமி என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சேலத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து எப்போதாவது வெளியில் வந்து, முகத்தைக் காட்டி விட்டு மீண்டும் வீட்டுக்குள் பதுங்கிக் கொள்வதையே வழக்கமாக வைத்திருப்பவர்தான் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி. நானும் இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வதற்காகத் திருவாய் மலர்ந்து பேட்டிகள் கொடுப்பார்.

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்னால் மக்கள் மன்றத்தால் நிராகரிக்கப்பட்டு, ஒதுக்கித் தள்ளப்பட்ட பழனிசாமி, தோல்வியை மட்டுமே தனது கட்சிக்கு வாரி வழங்கிக் கொண்டு இருக்கிறார். சென்னையைச் சுற்றிலும், நெல்லையைச் சுற்றிலும் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களுக்கான நிவாரணப் பொருள்களை வழங்கி மக்கள் பணி செய்ய மனமில்லாமல், பொதுக்குழு என்ற பெயரால் பொழுதுபோக்குக் கச்சேரியை நடத்தி முடித்திருக்கிறார் பழனிசாமி.

அதில் கழக அரசைப் பற்றி வாய்க்கு வந்ததை வழக்கம்போல உளறி இருக்கிறார். 'நான் சில விஷயங்களை அவிழ்த்து விட்டால் எடப்பாடி பழனிசாமி திகாருக்கு சென்று விடுவார். சில விஷயங்கள் அரசாங்க ரகசியம் என்பதால் அமைதியாக விட்டுவிட்டேன்; முதல்-அமைச்சராக என் கையெழுத்து இல்லாமல் ஒரு கோப்பும் சென்றது இல்லை' என அ.தி.மு.க. பொதுக்குழு நடந்த அன்று ஓ.பன்னீர்செல்வம் பேசியிருக்கிறாரே… அந்த ரகசியங்களை எடப்பாடி சொல்வாரா? அப்படி என்ன டீலிங் நடைபெற்றது?"பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை எனத் தெளிவுபடுத்திவிட்டோம்" என பொதுக்குழுவில் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. கூட்டணி இல்லை என முடிவாகிவிட்டால் பா.ஜ.க.வை விமர்சிக்க வேண்டியதுதானே! அ.தி.மு.க.வை யார் கட்டிப் போட்டிருக்கிறார்கள்.

அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் மத்திய அரசைக் கண்டித்தோ அல்லது பா.ஜ.க.வைக் கண்டித்தோ ஒரு தீர்மானத்தைக் கூட நிறைவேற்றவில்லையே ஏன்? தமிழ்நாடு அரசு தொடர்பான தீர்மானங்களில் கண்டனம்; மத்திய அரசு தொடர்பான தீர்மானங்களில் எல்லாம் வலியுறுத்தல் என்பது இரட்டை முகமூடிதானே..!

பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்ற பழனிசாமியின் பச்சைப் பொய் நாடகத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை. சென்னையிலும் தென் மாவட்டங்களிலும் ஏற்பட்ட மழை வெள்ளப் பாதிப்புகளின் காரணமாகக் கழக இளைஞரணி மாநாடு தள்ளி வைக்கப்பட்டதை ஏளனம் செய்து மட்டமாகக் கருத்து தெரிவித்துப் பேசியிருக்கிறார் பழனிசாமி.

புயல், மழை வெள்ளத்தால் தமிழ்நாட்டின் 8 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு இருக்கும்போது மாநாடு நடத்தவேண்டாம் என்று எங்கள் தி.மு.கழகத் தலைமை முடிவெடுத்ததைப் பழனிசாமி பாராட்டி இருக்கவேண்டும். ஏதோ தான் சாபம் விட்டதைப் போல சவடால் விட்டுள்ளார் பழனிசாமி. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டையே டிவியைப் பார்த்துத் தெரிந்து கொண்டவர் பழனிசாமி. அதனால் அவர் டிவி பார்த்திருந்தால் தெரிந்திருக்கும். இளைஞர் அணி மாநாடு 2 முறைதான் தள்ளி வைக்கப்பட்டது. அதுவும் மக்களுக்காக!

சென்னை வெள்ளம் ஏற்பட்ட போதும், தென் மாவட்டங்களில் மழை பாதிப்பு உண்டானபோதும் ஆட்சியில் இருக்கும் தி.மு.க. முதலில் மக்களுக்குத்தான் சேவை செய்யும். கட்சி மாநாடு இரண்டாம்பட்சம்தான். மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் தொண்டர்களுக்கு மோசமான வகையில் உணவு வழங்கப்பட்டதால் அண்டா அண்டாவாக உணவைத் தரையில் கொட்டி விரயமாக்கியது எல்லாம் மறந்துவிட்டதா?

தவழ்ந்து சென்று முதல்-அமைச்சரான எடப்பாடிதான் அரசியலில் கத்துக்குட்டி. கஜா புயல் டெல்டாவைத் தாக்கியபோது சேமூர் அம்மாபாளையத்தில் மாமனார் வீட்டு விசேஷத்தில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்த பழனிசாமி எல்லாம் வெள்ள பாதிப்புக் களத்தில் மக்களோடு நிற்கும் அமைச்சர் உதயநிதியைப் பற்றிப் பேசவே அருகதை அற்றவர்.

2019 நாடாளுமன்ற தேர்தல், 2019-ல் நடந்த 22 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல், 2019-ல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், 2021-ல் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022-ல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் என 8 தேர்தல்களில் அ.தி.மு.க. தோல்வி அடைந்தது.

எடப்பாடி பழனிசாமி வசம் அ.தி.மு.க வந்த பிறகு தொடர்ச்சியாகத் தேர்தல் தோல்விகளைச் சந்தித்து வருகிறது அ.தி.மு.க. தோல்வியைத் தோளில் போட்டு வளர்த்து வருகிறவர் பழனிசாமி. அவரால் அ.தி.மு.க.வை அரை அங்குலம் கூட வளர்க்க முடியாது என்பது அக்கட்சியினருக்கே தெரியும். வரப்போகிற நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 தோல்வியைத் தழுவி 'தோல்விசாமி' என்பதை அவர் மெய்ப்பிக்கத்தான் போகிறார். இதனை நாடு பார்க்கத்தான் போகிறது".

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்