< Back
மாநில செய்திகள்
தனக்கே தெரியாத சமூகநீதி பற்றி எடப்பாடி பழனிசாமி பாடம் எடுக்க வேண்டாம் - டி.ஆர்.பாலு கண்டனம்
மாநில செய்திகள்

"தனக்கே தெரியாத சமூகநீதி பற்றி எடப்பாடி பழனிசாமி பாடம் எடுக்க வேண்டாம்" - டி.ஆர்.பாலு கண்டனம்

தினத்தந்தி
|
3 July 2022 1:39 AM IST

திமுகவை வீண் வம்புக்கு இழுத்து எடப்பாடி பழனிசாமி தன் கட்சிக்குள் நடப்பதை மறைக்க முயற்சிப்பதாக டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

சென்னை,

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்டினார். திரவுபதி முர்முவை சந்தித்து ஆதரவு தெரிவிக்க ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் வருகை தந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பெண்ணான திரவுபதி முர்முவை ஆதரிக்காமல், சமூக நீதி என பேசி மக்களை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏமாற்றி வருகிறார்" என்று அவர் குற்றம் சாட்டினார். எடப்பாடி பழனிசாமியின் இந்தக் கருத்துக்கு திமுக தரப்பில் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டி.ஆர்.பாலு கூறியிருப்பதாவது;-

"ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ள அ.தி.மு.க.வின் முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தனக்கே தெரியாத 'சமூகநீதி' பற்றி தி.மு.க.விற்குப் பாடம் எடுத்திருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதுமே தனக்குத் தெரியாத விஷயங்கள் பற்றி பேசுவதில் பழனிசாமிக்கு நிகர் அவரேதான் என்பது எனக்குத் தெரியும்.

திராவிட முன்னேற்றக் கழகமும், கலைஞரும்தான் பட்டியலினச் சமூகத்திலிருந்து அறிவுசார்ந்த மாபெரும் தலைவரான கே.ஆர்.நாராயணனை இந்த நாட்டின் ஜனாதிபதியாக ஆக்கியது. இந்திய நாடாளுமன்றத்தின் பேரவைத் தலைவராக மிகச் சிறந்த நிர்வாகியான பாபு ஜெகஜீவன்ராம் மகள் மீராகுமார் தேர்வு செய்யப்படுவதற்குத் திமுகழகம்தான் உறுதுணையாக இருந்தது.

பட்டியலின - பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீட்டை உயர்த்தியது மட்டுமல்ல உள்இடஒதுக்கீடு அளித்து உண்மையான சமூகநீதியை அளித்தது தி.மு.க. அரசும் கலைஞரும்தான் என்ற பால பாடம் எல்லாம் பாவம் பழனிசாமிக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. அதைத் தெரிந்து கொள்ளும் மனநிலையிலும் அவர் இல்லை.

பா.ஜ.க.வுடன் கூட்டணி என்றாலும், ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு என்றாலும் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தைத் தேர்வு செய்யாமல் நட்சத்திர ஹோட்டலில் அரசியல் நடத்தும் பழனிசாமி போன்றோர் தி.மு.க.வின் சமூகநீதி வரலாற்றைச் சற்று படித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தி.மு.க.வை வீண் வம்புக்கு இழுத்து தன் கட்சிக்குள் நடக்கும் கூத்துக்களை மறைக்க பழனிசாமி முயற்சி செய்கிறார். அது நடக்காது.

திமுகவை பொறுத்தவரை ஜனநாயக ரீதியாக எதிர்கட்சிகளின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி ஜனநாயகத்தை, கூட்டாட்சித் தத்துவத்தை, மதச்சார்பின்மையை, மாநில உரிமைகளை மதிக்கும் ஒரு ஜனாதிபதி வேண்டும் என்ற நோக்கில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை ஆதரிக்கிறது. திமுகவையும் சமூகநீதியையும் கொச்சைப்படுத்தும் செயலில் அவர் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்"

இவ்வாறு டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்