< Back
மாநில செய்திகள்
ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெறும் திருமாவளவனிடம் நலம் விசாரித்த எடப்பாடி பழனிசாமி
மாநில செய்திகள்

ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெறும் திருமாவளவனிடம் நலம் விசாரித்த எடப்பாடி பழனிசாமி

தினத்தந்தி
|
28 Sept 2023 5:25 AM IST

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள திருமாவளவனிடம் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் நலம் விசாரித்தார்.

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராகி வருவதாகவும், அவர் நாளை (வெள்ளிக்கிழமை) வீடு திரும்புவார் என்றும் கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேசி அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.

இதேபோல் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று தொல்.திருமாவளவனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நலம் விசாரித்தார்.

அ.தி.மு.க. கூட்டணியில் சேர வாய்ப்பு

தற்போது, பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியே வந்துள்ள நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரும்படி எடப்பாடி பழனிசாமி தொல்.திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்து இருக்கலாம் என்றும், பா.ஜ.க. அல்லாத அ.தி.மு.க. கூட்டணியில் இணைய தயார் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொல்.திருமாவளவன் அறிவித்து இருந்தது தற்போது நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

அதாவது, தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் 2 இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. இந்த நிலையில், வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் வி.சி.க. 3 தொகுதிகளை எதிர்பார்ப்பதாகவும், ஆனால் தி.மு.க. தரப்பில் 1 தொகுதி மட்டுமே வழங்க இருப்பதால் அ.தி.மு.க.வுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி சேர வாய்ப்பு இருப்பதாகவும் செய்தி வெளியாகி இருந்தது.

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு கூறும்போது, "நாங்கள் தி.மு.க. கூட்டணியில் தொடர்வதாக ஏற்கனவே எங்கள் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்து விட்டார். எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நலம் மட்டுமே விசாரித்தாரே தவிர அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை.

அதுவும், தேர்தல் கூட்டணி குறித்து தொலைபேசியிலா பேசுவார்கள்? எனவே, வெளியாகி உள்ள செய்தி முற்றிலும் வதந்தியே" என்று தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மேலும் செய்திகள்