ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்
|முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு முன்னாள் அமைச்சரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் காலமானார். அவருக்கு வயது 98. வயது மூப்பு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ஆர்.எம்.வீரப்பனுக்கு இன்று காலை மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆர்.எம்.வீரப்பன், சிகிச்சை பலனளிக்காமல் இன்று பிற்பகல் உயிரிழந்தார். ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது,
எம்.ஜி.ஆர். கழக நிறுவனரும், முன்னாள் அமைச்சரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம். வீரப்பன் வயது முதிர்வால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
ஆர்.எம். வீரப்பன் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தைத் தொடங்கும் போது அவருக்கு உறுதுணையாகவும், தொடர்ந்து புரட்சித் தலைவர் அமைச்சரவையில் அமைச்சராகவும்; அதே போல், ஜெயலலிதா காலத்தில் கழக இணை பொது செயலாளராகவும், அமைச்சராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வீரப்பனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.