< Back
மாநில செய்திகள்
மருதுசேனை அமைப்பின் நிறுவனத் தலைவர் ஆதிநாராயணன் கைதுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்கோப்புப்படம் 
மாநில செய்திகள்

மருதுசேனை அமைப்பின் நிறுவனத் தலைவர் ஆதிநாராயணன் கைதுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தினத்தந்தி
|
23 March 2024 9:29 PM IST

சிறையில் உள்ள ஆதிநாராயணனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை நடைபெறுவதாகவும், இச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மருதுசேனை அமைப்பின் நிறுவனத் தலைவர் ஆதிநாராயணன், கடந்த 10.3.2024 அன்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும், தென்மண்டல காவல் துறைத் தலைவரிடமும் புகார் மனு அளித்திருக்கிறார்.

மேலும், 10.3.2024 அன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், ஆதிநாராயணன் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்தவும், போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது தமிழக காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வலியுறுத்தியும் பேட்டி அளித்துள்ளார்.

போதை வியாபாரிகள் மீது தமிழக காவல் துறையிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, 14.3.2024 அன்று காலை 11 மணியளவில் காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று மருதுசேனை அமைப்பின் நிறுவனத் தலைவர் ஆதிநாராயணனுடைய வாகனத்தை சேதப்படுத்தியும், வெடிகுண்டு வீசியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்ய முயற்சிகள் நடைபெற்றுள்ளது. இது குறித்து காவல் துறையில் அவர் புகார் அளித்துள்ளார்.

போதை வியாபாரிகள் குறித்து தகவல் கொடுத்த புகாரின் மீது ஆளும் தி.மு.க அரசின் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல், புகார் கொடுத்து, தாக்குதலுக்கு உள்ளான மருதுசேனை அமைப்பின் நிறுவனத் தலைவர் ஆதிநாராயணனையே அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணத்திற்காகவும், அவருடைய நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் பணிகளை முடக்கும் விதமாகவும் அடக்குமுறையைக் கையாண்டு கைது செய்து, 15 நாள் நீதிமன்றக் காவலில் வைத்துள்ள தி.மு.க அரசின் காவல்துறைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்தவர்களையும், மருதுசேனை தலைவர் ஆதிநாராயணன் மீது தாக்குதல் நடத்தியவர்களையும் கைது செய்யவும், தற்போது சிறையில் உள்ள ஆதிநாராயணனை உடனடியாக விடுதலை செய்யவும், இந்த தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்