மின் கட்டண உயர்வால் கடும் பாதிப்பு- எடப்பாடி பழனிசாமி கண்டனம்
|மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ் நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சென்னை,
கடும் மின்கட்டண உயர்வால் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பின் தொழிற்சாலைகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இரண்டாம் முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியதுடன், மின்சார நிலைக் கட்டணம், பீக் ஹவர் கட்டணம், சோலார் தகடுகள் பொருத்தி அதன்மூலம் உபயோகிக்கப்படும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் என்று அனைத்துக் கட்டணங்களையும் உயர்த்தியதால், தமிழகத்தில் உள்ள தொழில் துறையும், ஜவுளித் துறையும் பெரும் சரிவை சந்தித்து வருகிறது. எனவே, மின் கட்டணங்களைக் குறைக்க தமிழக அரசை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ் நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, தமிழகத்தில் மூலப் பொருட்கள் விலை உயர்வு மற்றும் ஆட்கள் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், தற்போது இரண்டாம் முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியதால், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் தமிழகத்தில் மூடப்பட்டு, பல தொழில் முனைவோர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் தங்களது வேலை வாய்ப்பை இழந்துள்ளனர் என்று நான் பலமுறை அறிக்கைகள் மற்றும் பேட்டிகளின் வாயிலாகவும், சட்டமன்றத்திலும் திமுக அரசின் கவனத்திற்கு கொண்டுவந்து, உடனடியாக மின் கட்டணங்களை குறைக்க வலியுறுத்தப்பட்டது. இதன் காரணமாக, இந்த அரசு பீக் ஹவர் சார்ஜை மட்டும் தற்காலிகமாக டி.ஓ.டி மீட்டர் பொருத்தும் வரை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழ் நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு, பீக் ஹவர் கட்டணங்களை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். நிறுவனத்தின் மேற்கூரையில் வங்கிக் கடன் பெற்று சோலார் பேனல்கள் அமைத்து மின் உற்பத்தி செய்வதற்கு மின் வாரியம் யூனிட் ஒன்றுக்கு ரூ.1.53 பைசா கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
மேலும் தொழிற்சாலைகள் பயன்படுத்தும் மொத்த மின்கட்டணத்தில் ஒன்றரை மடங்கு கட்டணத்தை முன்பணமாக ஏற்கனவே மின் வாரியம் வசூலித்துள்ளது. இப்பணத்திற்கு வங்கிகளில் 11 சதவீத வட்டிக்கு கடன் பெற்று மின் வாரியத்திற்கு கட்டப்பட்டுள்ளது. ஆனால் மின் வாரியம் 5.70 சதவீத வட்டி மட்டுமே வழங்குவதாகவும், இந்நிலையில் ஒரு கி.வாட்டுக்கு முன்பு இருந்த ரூ. 35/- கட்டணத்தை, 430 சதவீதம் உயர்த்தி ரூ. 153 என்று கட்டணம் விதித்துள்ளது. இதனால் தொழிற்சாலைகள் மின் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய ஒன்றரை மடங்கு முன்பணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
எனவே, தொழில் முனைவோர்கள் வங்கிகளுக்கு அதிக வட்டி தரவேண்டி உள்ளதால், முன்பு இருந்ததுபோல் ஒரு கிலோ வாட்டுக்கு 35 ரூபாய் மட்டுமே நிலைக் கட்டணமாக விதிக்க வலியுறுத்துவதாகவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
எனவே, தமிழ் நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பினரின் கோரிக்கைகளை ஏற்று, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையைக் காப்பற்ற திமுக அரசை வலியுறுத்துகிறேன், என்று கூறியுள்ளார்.