மேகதாது அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
|மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டுமென எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
கர்நாடக மாநில நிதிநிலை அறிக்கையை நேற்று தாக்கல் செய்த அம்மாநில முதல்-மந்திரி சித்தராமையா, மத்திய அரசின் அனுமதியை பெற்று விரைவில் மேகதாது அணை கட்டப்படும் எனவும், அணைகட்டும் பணிகளை மேற்கொள்ள பிரத்யேக குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மேகதாது அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடக அரசுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறி செயல்படும் கர்நாடக அரசின் செயல்பாடுகளை தி.மு.க. அரசு வேடிக்கை பார்க்கிறதா? காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டினால், 20 மாவட்டங்களில் குடிநீர்ப் பிரச்சனை ஏற்படும். டெல்டா மாவட்ட விளைநிலங்கள் நீரின்றி பாலைவனமாகும்.
கர்நாடகத்தை ஆண்ட காங்கிரஸ் அரசும், பாஜக அரசும் தமிழ்நாட்டுக்கு துரோகங்கள் செய்தது. மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும். தவறினால், தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யும் கர்நாடக காங்கிரஸ் அரசையும், கைகட்டி வேடிக்கை பார்க்கும் மத்திய, மாநில அரசுகளையும் கண்டித்து போராட்டம் நடத்துவோம்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.