நன்னிலம் தொகுதியில் அமைந்துள்ள, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொகுதி மாற்ற முயலும் திமுக அரசுக்கு கண்டனம் - எடப்பாடி பழனிசாமி
|கல்லூரிக்கு தேவையான நிலத்தை வாங்கவும், சொந்தக் கட்டிடம் கட்டவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டமன்றத் தொகுதி ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியாகும். இப்பகுதி விவசாய கூலித் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். திருவாரூர் மாவட்டத்தில், அப்போதைய உணவுத் துறை அமைச்சரும், நன்னிலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஆர். காமராஜ், குடவாசல் மற்றும் அதன் அருகாமையில் உள்ள மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று ஜெயலலிதாவின் அரசு 2017-ல் நான் முதலமைச்சராக இருந்த சமயத்தில், குடவாசலில் இருபாலர்கள் படிக்கக்கூடிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவக்கப்பட்டது. முதற்கட்டமாக அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கல்லூரி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து 2022-23ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை முடிவடைந்து, தற்போது வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
குடவாசலில் அமைந்துள்ள இக்கல்லூரி, இப்பகுதியில் உள்ள ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் உயர்கல்வித் தேவையை மிகச் சிறப்பாக பூர்த்தி செய்து வருகிறது. தற்போது இக்கல்லூரியில் சுமார் 524 மாணவிகளும், 160 மாணவர்களும் படித்து வருகின்றனர். முக்கியமாக அதிக அளவில் மகளிர் இக்கல்லூரியில் கல்வி பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.
2017-18ம் ஆண்டில், முதற்கட்டமாக கல்லூரிக்கு தேவையான வகுப்பறைகள் மற்றும் கட்டிடங்கள் கட்டுவதற்கு, இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இடம் (நிலம்) தேர்வு செய்யப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டது. அச்சமயத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு அறநிலையத் துறைக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டதை ஆட்சேபித்து, உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தினால், அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலத்தில் கல்லூரிக்கு கட்டிடம் கட்டுவதில் தடை ஏற்பட்டது. தற்போது இந்த திமுக அரசு, நன்னிலம் சட்டமன்றத் தொகுதி, குடவாசலில் அமைந்துள்ள இக்கல்லூரியை திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள கொரடாச்சேரி ஒன்றியப் பகுதிக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்வதாக செய்திகள் வந்தன.
குடவாசல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளது என்ற செய்தியை அறிந்தவுடன் கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில், அத்தொகுதியில் தொடர்ந்து வெற்றிபெற்று வரும் எங்களது கழக சட்டமன்ற உறுப்பினர் ஆர். காமராஜ் இது தொடர்பாக சட்டமன்றத்தில் அரசின் கவனத்தை ஈர்த்து பேசியபோது பதில் அளித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, அந்தப் பகுதி (குடவாசல்) மக்களின் விருப்பத்திற்கு மாறாக கல்லூரி இடமாற்றம் செய்யப்படமாட்டாது என்று உறுதி அளித்தார்.
ஆனால், தற்போது மீண்டும் இக்கல்லூரி அருகிலுள்ள திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கு மாற்றப்படும் என்று செய்திகள் வருவதை அறிந்து, இப்பகுதி மக்களும், கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியரும் தங்களுடைய கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். 29.09.2022 முதல் இக்கல்லூரி மாணவ, மாணவியர்கள் இரவு பகலாக காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை இந்த அரசு மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
ஏற்கெனவே, ஜெயலலிதா அரசு தொடங்கிய பல நல்ல திட்டங்களுக்கு முடிவு கட்டும் எண்ணத்துடன் ஆட்சி நடத்தும் இந்த விடியா அரசு, தற்போது குடவாசலில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை திருவாரூர் தொகுதிக்கு மாற்ற நினைத்தால், குடவாசல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை ஒன்று திரட்டி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும், தொடர் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெறும் என்று இந்த விடியா அரசை எச்சரிக்கிறேன்.
அதே போல், இக்கல்லூரிக்கு தேவையான நிலத்தை வாங்கவும், கல்லூரிக்கு சொந்தக் கட்டிடம் கட்டவும் தேவையான நடவடிக்கையினை உடனடியாக மேற்கொள்ளுமாறு இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன். மேலும், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இக்கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவியரிடம், இக்கல்லூரி இடமாற்றம் செய்யப்படமாட்டாது என்று உறுதிமொழி அளித்து, மாணாக்கர்களது போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர இந்த விடியா அரசை வற்புறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.