< Back
மாநில செய்திகள்
அ.தி.மு.க.வை உடைக்க பார்க்கிறதா தி.மு.க.? அமைச்சர் மனோ தங்கராஜ் பதில்
மாநில செய்திகள்

அ.தி.மு.க.வை உடைக்க பார்க்கிறதா தி.மு.க.? அமைச்சர் மனோ தங்கராஜ் பதில்

தினத்தந்தி
|
21 Aug 2022 5:21 AM IST

ஹலோ எப்.எம்.மில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட்லைட்' நிகழ்ச்சியில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பேசுகிறார்.

அதில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு தி.மு.க. ஆதரவு அளிப்பதாக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையில், ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து அ.தி.மு.க.வை உடைக்க தி.மு.க. முயலவில்லை என்றும், நாங்கள் உடைந்தே தீருவோம் என்று அ.தி.மு.க.வினர் தான் ஒற்றைக்காலில் நிற்பதாக அவர் நையாண்டியாக தெரிவித்தார்.

இதில் தி.மு.க. வெறும் பார்வையாளர் மட்டுமே என்று கூறிய அவர், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலா ஆகியோருக்கு தி.மு.க. எப்போதுமே எதிரானது என்றும் அவர் விமர்சித்தார். மேலும், அ.தி.மு.க.விடம் தற்போது நல்ல தலைமை இல்லாததால், அவர்களது தொண்டர்கள் தடுமாறி நிற்பதாகவும், மிஞ்சி இருப்பது இரட்டை இலை சின்னம் மட்டுமே என்றும் தெரிவித்தார். அ.தி.மு.க. என்ற குட்டையை பா.ஜ.க. குழப்பி மீனை பிடிக்க காத்திருக்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் கல்வித்தொலைக்காட்சிக்கு இந்துத்துவா கருத்தியலை கொண்ட ஒருவரை தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்தது தொடர்பான சர்ச்சைக்கு பதிலளித்த அவர், அரசாங்கம் யார், என்ன கருத்தியலை கொண்டிருக்கிறார்கள்? என்று ஒவ்வொருவரையும் ஆராய்ந்து பார்ப்பது கடினம் என்றும், அரசு ஊழியர்கள் மதம் சார்ந்தோ, அரசியல் கட்சிகள் சார்ந்தோ ஏதேனும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதிப்பட கூறினார்.

மேலும் தமிழகத்தில் மின்கட்டண உயர்வுக்கு மத்திய அரசே காரணம் என கூறுவது ஏன்? மழைக்கால வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளில் மெத்தனமா? என்பது உட்பட நிகழ்ச்சி தொகுப்பாளர் ராஜசேகரின் சமகால அரசியல் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

மேலும் செய்திகள்