"பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார்" - கே.பி.முனுசாமி
|பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை வானகரத்தில் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தொடங்கி பரபரப்பாக நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றனர். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆவேசமாக மேடையில் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து அடுத்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமையுடன், அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என்றும் கே.பி.முனுசாமியும் கூறினார். இதனைத்தொடர்ந்து, அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்படுவதாக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
தொடர்ந்து தமிழ்மகன் உசேனை கட்சியின் அவைத்தலைவராக பொதுக்குழு தேர்வு செய்தது. இதன்பின் ஜூலை 11ஆம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அதிமுக அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட தமிழ்மகன் உசேன் அறிவித்தார்.
இந்த சூழலில் பொதுக்குழுவில் இருந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியேறினார். சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக மேடையில் வைத்திலிங்கம் கோஷமிட்டார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்து போட்டால்தான் அடுத்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் பொதுக்குழு மேடையில் இருந்து வெளியேறிய வைத்திலிங்கம் தெரிவித்தார். அதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மேடையில் இருந்து வெளியேறினர்.
பிறகு, மேடையில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்று அறிவித்தார்.
அதிமுகவின் ஒற்றைத்தலைமை என்ற கோரிக்கை பொதுக் குழுவில் ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக பொதுக் குழு உறுப்பினர்கள் பலரும் பூங்கொத்துகளையும், மலர்மாலைகளையும் அறிவித்து தங்களது வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் அதிமுக பொதுக்குழு கூட்டம் நிறைவு பெற்றது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இன்று காலை தொடங்கிய அதிமுக பொதுக் குழு, அடுத்த பொதுக் குழு கூட்டத்துக்கான தேதி அறிவிக்கப்பட்டதுடன் நிறைவு பெற்றது.
இந்நிலையில் ஜூலை 11ல் நடைபெற உள்ள அடுத்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.