பவன் கல்யாணுக்கு நன்றி தெரிவித்த எடப்பாடி பழனிசாமி
|அ.தி.மு.க.வின் 53-வது துவக்க விழாவை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பவன் கல்யாணுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஆந்திர மாநில துணை முதல்-மந்திரியும், நடிகருமான பவன் கல்யாண் அ.தி.மு.க.வின் 53-வது துவக்க விழாவை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து, எம்.ஜி.ஆர் குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்தப் பதிவில் அவர், "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மீது எனக்குள்ள அன்பும் அபிமானமும் இன்னும் அப்படியே இருக்கிறது. அ.தி.மு.க.வின் 53-வது தொடக்க நாளான அக்டோபர் 17-ம் தேதி புரட்சித் தலைவரின் அன்பர்கள், அபிமானிகள், ரசிகர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்" என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பவன் கல்யாணுக்கு நன்றி தெரிவித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர், "சமத்துவம்-சமூகநீதி தழைக்க, சாதி-மதசார்பற்று அனைவரும் அனைத்தும் பெற, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கண்டெடுத்து, புரட்சித்தலைவி ஜெயலலிதா வளர்த்த, எனது தலைமையிலான மாபெரும் இயக்கமாம் அ.தி.மு.க.வின் 53-வது துவக்க விழாவை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி பவன் கல்யாணுக்கு நன்றி!" என்று தெரிவித்துள்ளார்.