கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
|கிருஷ்ண பகவானின் கீத உபதேசத்தை நாளும் மனதில் கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள 'கிருஷ்ண ஜெயந்தி' வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-
"காக்கும் கடவுளாம் கண்ணபிரான் கிருஷ்ணராக அவதரித்த திருநாளை 'கிருஷ்ண ஜெயந்தி' என்று கொண்டாடி வரும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய 'கிருஷ்ண ஜெயந்தி' நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த தினமான கிருஷ்ண ஜெயந்தியன்று, மக்கள் தங்கள் இல்லங்களில் அழகிய வண்ணக் கோலங்களிட்டு, வாயிற்களில் மாவிலை தோரணங்களைக் கட்டி, ஸ்ரீபாதம் எனப்படும் குழந்தைகளின் பிஞ்சு பாதச் சுவடுகளை மாவில் நனைத்து இல்லங்களில் வழிநெடுக பதித்து, கிருஷ்ணருக்கு விருப்பமான வெண்ணெய், தயிர், பழங்கள், இனிப்பு பலகாரங்களைப் படைத்து, இறைவனை பக்தியுடன் வழிபட்டு மக்கள் மகிழ்வார்கள்.
குழப்பத்தையும், தடுமாற்றத்தையும் தவிர்த்து, தெளிந்த நீரைப்போல் மனதை நிலை நிறுத்தி, பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்தால், ஒருவர் எடுத்த காரியத்தில் வெற்றி பெற்று அனைத்து சுகங்களும், மன நிம்மதியும் கிடைக்கப் பெற்றவராய் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திடலாம் என்ற கிருஷ்ண பகவானின் கீத உபதேசத்தை நாளும் மனதில் கொண்டு, ஸ்ரீ கிருஷ்ண பகவான் அவதரித்த இனிய நாளில், நாடெங்கும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி பெருக வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்து கொள்கிறேன்."
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.