போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
|போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை,
2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் தி.மு.க. நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் 9ம் தேதி டெல்லியில் கைது செய்தனர்.
இதையடுத்து, சென்னை சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினார். மேலும், ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கும் சீல்வைக்கப்பட்டது.
இதனிடையே, வீட்டிற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி ஜாபர் சாதிக்கின் மனைவி டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து, ஜாபர் சாதிக்கின் மனைவி மற்றும் குடும்பத்தினர் வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய பாதுகாப்புப்படையினர் பாதுகாப்புடன் இன்று காலை ஜாபர் சாதிக் வீட்டிற்குள் நுழைந்த அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஜாபர் சாதிக்கிற்கு தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.