< Back
மாநில செய்திகள்
குண்டு வீச்சு சம்பவம் எதிரொலி:  கேன், பாட்டில்களில் பெட்ரோல் வழங்குவது தற்காலிக நிறுத்தம்  போலீசாரின் அறிவுரையை ஏற்று பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு
கடலூர்
மாநில செய்திகள்

குண்டு வீச்சு சம்பவம் எதிரொலி: கேன், பாட்டில்களில் பெட்ரோல் வழங்குவது தற்காலிக நிறுத்தம் போலீசாரின் அறிவுரையை ஏற்று பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு

தினத்தந்தி
|
26 Sept 2022 12:15 AM IST

குண்டு வீச்சு சம்பவம் எதிரொலியாக கேன், பாட்டில்களில் பெட்ரோல் வழங்குவது தற்காலிக நிறுத்தம் செய்யப்படுவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனா்.

தமிழகத்தில் கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, ராமநாதபுரம், திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பா.ஜ.க., இந்து முன்னணி பிரமுகர்கள் வீடு, கடைகள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. பாரதீய ஜனதா கட்சி அலுவலகத்திலும் குண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் இரவு நேர ரோந்துப்பணியை தீவிரமாக்கி உள்ளனர். முக்கிய இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை தடுக்கும் வகையில் பெட்ரோல் பங்க்குகளில் பாட்டில்கள் மற்றும் கேன்களில், பெட்ரோல், டீசல் வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்று போலீசார் அறிவுரை வழங்கி இருந்தனர்.

இது பற்றி தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க மாநில தலைவர் முரளி கூறுகையில், தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அசம்பாவித சம்பவத்தை தடுக்கும் வகையில் பெட்ரோல் பங்க்குகளில் பாட்டில்கள் மற்றும் கேன்களில் பெட்ரோல், டீசல் வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்று போலீசார் அறிவுரை வழங்கினர். இதை ஏற்று தமிழகம் முழுவதும் சுமார் 6 ஆயிரம் பெட்ரோல் பங்க்குகளில் கேன் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல், டீசல் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி உள்ளோம். வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் நிரப்பப்படும் என்றார். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சில பெட்ரோல் பங்கில், கேன், பாட்டில்களில் பெட்ரோல், டீசல் வழங்க மாட்டோம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்