< Back
மாநில செய்திகள்
மஞ்சுமெல் பாய்ஸ் எதிரொலி: கொடைக்கானல் குணாகுகையை பார்வையிட குவியும் சுற்றுலா பயணிகள்
மாநில செய்திகள்

'மஞ்சுமெல் பாய்ஸ்' எதிரொலி: கொடைக்கானல் குணாகுகையை பார்வையிட குவியும் சுற்றுலா பயணிகள்

தினத்தந்தி
|
6 March 2024 7:28 AM IST

'மஞ்சுமெல் பாய்ஸ்' மலையாள சினிமா எதிரொலியாக கொடைக்கானல் குணாகுகையை பார்வையிட சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் குவிந்து வருகின்றனர்.

கொடைக்கானல்,

சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகின்றனர்.

வார விடுமுறை நாட்கள், தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக ஒரு திரைப்படம் மூலம் சுற்றுலா பயணிகளின் கூட்டம் கொடைக்கானலில் அதிகரித்த வண்ணம் உள்ளது.

கடந்த மாதம் 22-ந்தேதி 'மஞ்சுமெல் பாய்ஸ்' என்ற மலையாள திரைப்படம் வெளியானது. கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. அந்த திரைப்படத்தில் வரும் காட்சிகள் கொடைக்கானல் மலைப்பகுதியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வனப்பகுதியில் உள்ள குணாகுகை தான் அந்த படத்தின் கதை கருவாகவும், உயிரோட்டமாகவும் அமைந்திருக்கிறது. இதனால் அந்த திரைப்படத்தை பார்த்த பலரும் குணாகுகையை பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலுடன் கொடைக்கானலுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

குறிப்பாக கேரளாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கொடைக்கானலுக்கு வருகின்றனர். அவர்கள் பஸ், வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் வருகை தருகின்றனர். குணாகுகையை பார்வையிடும் அவர்கள், 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படத்தில் வரும் காட்சிகளை நினைவுகூர்ந்து தங்களது செல்போன், கேமராக்களில் வீடியோ எடுத்து, அதனை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் 'ரீல்ஸ்'களாக பதிவு செய்து மகிழ்கின்றனர். அதிலும், அந்த திரைப்படத்தில் வரும் 'கண்மணி அன்போடு காதலன்...' என்ற பாடலை பாடியபடியும், நடனமாடியும் உற்சாகம் அடைகின்றனர்.

இந்தநிலையில் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குணாகுகை பகுதிக்கு வந்தனர். அவர்கள் அங்குள்ள தடுப்பு கம்பிகள் வழியாக குணாகுகையை பார்வையிட்டனர். மேலும் தங்களது செல்போன், கேமராக்களில் புகைப்படம், செல்பி, வீடியோ எடுத்தனர். அதேபோல் குணாகுகைக்கு அருகே பாறைகள் மீது மரங்களின் வேர்கள் படர்ந்திருக்கும் பகுதியை ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர். மேலும் அங்கு வேர்கள் மீது அமர்ந்தபடியும், நின்றபடியும் புகைப்படம் எடுத்தனர்.

நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுவதால் குணாகுகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்