தொடர் மழை எதிரொலி: சென்னை மற்றும் புறநகரில் வெள்ளத்தடுப்பு பணிகள் முதல்-அமைச்சர் ஆய்வு
|சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெறும் வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை,
தென்மேற்கு பருவமழை காலம் இந்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கியது. வரும் செப்டம்பர் வரை இது நீடிக்கும். தமிழகத்தில் 20-ந்தேதிவரை தென்மேற்கு பருவமழை பொழிவு 65.7 மி.மீ. ஆக பதிவாகியுள்ளது. ஜூன் மாதத்தில் சென்னைக்கு இயல்பாக 56 மி.மீ. மழை கிடைக்கப்பெறும் என்ற நிலையில், 19-ந்தேதியன்று ஒரே நாளில் சென்னை மாவட்டத்தில் 82.1 மி.மீ. மழை பெய்தது. இது கடந்த 6 ஆண்டுகளில் ஜூன் மாதத்தில் பதிவான மழையைவிட மிக மிக அதிகமாகும்.
இந்த நிலையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுக்கு வருவாய்த்துறை ஏற்கனவே அறிவுரைகளை வழங்கியுள்ளது. மேலும், மழை வெள்ளம் தொடர்பான புகார்களை மக்கள் பதிவு செய்வதற்காக சென்னையில் உள்ள மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்டங்களில் உள்ள மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்களில் கூடுதலாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்புகழ் குழு
அவை 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன. இந்த மையங்களில் முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். 94458 69848 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும், 'டிஎன்எஸ்எம்ஏஆர்டி' செயலி மூலமாகவும் புகார்களை பதிவு செய்யலாம். சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் தொடர்பான புகார்களை 1913 என்ற எண்ணில் பதிவு செய்யலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகரில் மழை வெள்ள தேக்கம் இல்லாத நிலையை உருவாக்குவதற்காக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் அரசு குழு அமைத்துள்ளது. இந்தக் குழு, தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்து மழைநீர் தேக்கத்தை தவிர்ப்பதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.
ஆய்வுக்கூட்டம்
தென்மேற்கு பருவமழை காலம் முடிந்த சில வாரங்களில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கிவிடும். தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மழை வெள்ளத் தேக்கத்தால் மக்களுக்கு தடங்கல் ஏற்படாத அளவில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தலைமைச்செயலாளர் இறையன்பு மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.