டெங்கு பரவல் எதிரொலி: 3 அரசு ஆஸ்பத்திரிகளில் தனிவார்டு அமைப்பு
|டெங்கு பரவல் எதிரொலியால் கடலூர், நாகர்கோவில், திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிகளில் தனிவார்டு அமைக்கப்பட்டு உள்ளது.
நாகர்கோவில்,
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு குமரி மாவட்டத்தில் பரவாமல் தடுக்க கேரள-குமரி எல்லையில் தீவிர கண்காணிப்பு பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதே சமயம் குமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவலும் அதிகரித்து வருகிறது. சராசரியாக வாரத்துக்கு 6 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, தக்கலை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தனிவார்டு
இந்தநிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பாதிப்புக்காக 40 படுக்கை வசதிகளுடன் கூடிய தனி வார்டு நேற்று திறக்கப்பட்டது. அங்கு தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு தனியாக படுக்கைகளும், டெங்கு காய்ச்சல் பாதிப்பு உடையவர்களுக்கு கொசு வலை விரிக்கப்பட்ட தனி படுக்கைகளும் போடப்பட்டு உள்ளன.
காய்ச்சல் பாதிப்பால் தற்போது 14 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 2 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர், கும்பகோணத்தில்...
கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் 7 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் 28 படுக்கைகள் கொண்ட 4 தனி வார்டுகள் அமைக்கப்பட்டு நோயாளிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம், திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த 3 வாலிபர்கள் சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கடந்த 8-ந்தேதி தங்களது வீட்டிற்கு வந்தனர். இந்தநிலையில், 3 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறுமி, குழந்தைக்கு டெங்கு
திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 11 வயது சிறுமி உள்பட 4 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கும் காய்ச்சலுக்கு தனிவார்டு தொடங்கப்பட்டுள்ளது.
இதேபோல வேலூரில் ஒரு ஆண் குழந்தை உள்பட 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 37 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 151 பேர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.